ஜப்பானில் 2 ஆயிரம் பேர் பலி 10 ஆயிரம்பேரை காணவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
japan2

டோக்கியோ, மார்ச் - 14 - ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் மற்றும் சுனாமியில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  1995 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஜப்பானின் வடகிழக்கு பகுதியை உலுக்கி எடுத்தது. ரிக்டர் அளவையில் 8.9 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தினால் ஜப்பானில் வடகிழக்கு கடலோர பகுதியில் பயங்கர சுனாமி ஏற்பட்டது. 6 மீட்டர் உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த இந்த ஆழிப் பேரலைகளால் வடகிழக்கு ஜப்பானில் உள்ள பல நகரங்கள் சுனாமியால் சுருட்டிப் போடப்பட்டன. ஒரே சமயத்தில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதால் ஜப்பானில் மின்சாரம், தொலைத்தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணு உலைகள் உடனடியாக மூடப்பட்டன. பூகம்பத்தால் டோக்கியோ உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதேபோல சுனாமி அலைகளில் சிக்கி மேலும் பலரும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இந்த இரு பேரிடர் சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 200 என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மீட்பு குழுவினரின் நடவடிக்கைகளுக்கு பிறகு இந்த சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 10 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்பட்டபோது கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல்கள், படகுகள், மீன்பிடி படகுகள் ஏராளமானவை சுனாமியால் நகருக்குள் வந்து பின் கடலுக்கே திரும்பி சென்றது. இதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து மீட்பு குழுக்கள் ஜப்பான் வந்தவண்ணம் உள்ளன. இதேபோல நிவாரண பொருட்களுடன் பல்வேறு உலக நாடுகளின் விமானங்கள் டோக்கியோவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன.
சுமார் 10 லட்சம் பேர் பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.  இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க மோப்பநாய்களுடன் மீட்பு குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஜப்பான் நாட்டின் தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்திருப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்தை சீரமைக்க துரிதமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பானில் கடந்த செவ்வாய்க் கிழமை முதலே அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்பட்டு வந்தன. அவற்றின் அளவு படிப்படியாக உயர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை 8.9 என்ற அளவுக்கு உச்சத்தை அடைந்தது. நேற்றும்கூட பாதித்த பகுதிகளுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஜப்பான் மக்கள் எப்போது என்ன  ஆகுமோ என்ற பீதியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் ஜப்பானில் உள்ள அணு உலை ஒன்று ஏற்கனவே வெடித்து கதிர்வீச்சை வெளிப்படுத்தி உள்ளது. இப்போது மீண்டும் ஒரு அணுஉலை எந்தநேரமும் வெடிக்கலாம் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: