முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னி குவிக்குக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குவிக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், அவருக்கு மணிமண்டபமும், சிலையும் எழுப்ப முதல்வர் ஜெயலலிதா முடிவு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். இது தெடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களுள் மிக முக்கியமான ஒன்றான முல்லைப்பெரியாறு அணையை அற்புதமாக அமைத்துத் தந்த இங்கிலாந்து நாட்டின் பொறியாளர் பென்னி குவிக், தமிழக மக்கள் என்றென்றும் நன்றி கூறுகின்ற மகத்தான மனிதர் ஆவார். அந்த உத்தமரின் பிறந்தநாள், ஜனவரி 15 ஆகும். முல்லைப்பெரியாறு தண்ணீரால் வாழ்வு பெறும் பல கிராமங்களில், அந்த நாளை, பொங்கல் திருநாளாக ஏற்கனவே கொண்டாடுகின்றார்.

முல்லைப்பெரியாறு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து, ஒட்டுமொத்தத் தமிழகமும் கேரள அரசின் அரசியல் கட்சிகளின் அக்கிரமப் போக்கை எதிர்த்து கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து, நம் உரிமை காக்க கிளர்ந்து எழுந்து விட்ட இன்றையச் சூழலில் இந்த ஆண்டு தைப்பொங்கல், பென்னி குவிக் பிறந்த நாளான ஜனவரி 15 இல் அமைந்து இருப்பது, இயற்கையாகவே மனதுக்கு மகிழ்ச்சியையும், உறுதியையும் தருகின்றது.

நெடுங்காலமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்ற திருவிழாவான பொங்கல் விழாவில், நெல், கரும்பு, முந்திரி, தானியங்கள், காய்கறிகள், பழங்கள் அனைத்தையும் விளைவிக்கும் nullமிக்கும், உழவர்களுக்கு உதவிடும் எருதுகளுக்கு, பசுக்களுக்கும் நன்றி தெரிவித்துப் படையல் இடுவது நமது வழக்கம். எனவே, இந்த ஆண்டு தைப்பொங்கலை, மாமனிதர் பென்னி குவிக்குக்கு நன்றி கூறும் விழாவாக ஆங்காங்கு அவரது திரு உருவப் படங்களுக்கு மாலை சூட்டி, மலர்கள் தூவி நன்றி காட்ட வேண்டுகிறேன்.

பொறியாளர் பென்னி குயிக், தமிழகத்துக்கு ஆற்றிய அருந்தொண்டுக்கு, பெருமை சேர்க்கும் விதத்தில், தமிழக அரசு, அவருக்கு மணிமண்டபமும், சிலையும் எழுப்ப முடிவு எடுத்து இருப்பது, பாராட்டுக்கு உரியது ஆகும். இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் பென்னி குவிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையில் கேரளம் சேதம் விளைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; புதிய அணை எனும் அவர்களின் வஞ்சகத் திட்டத்தை ஏற்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கும், கேரளத்துக்கும் தமிழகத்தின் உறுதியை பிரகடனம் செய்யும் விதத்தில் இந்த மணிமண்டபம் நமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்