முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் ஆர்ஜிதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.13 - சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலத்தை மெட்ரோ ரெயில் பணிக்காக ஒப்படைக்கவேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகம் உட்பட பலர் தொடர்ந்த அப்பீல் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலங்களை, பொது மக்கள் சேவைக்காக ராஜா சர் ராமசாமி முதலியார் அறக்கட்டளைக்கு 1888-ம் ஆண்டு  அரசு வழங்கியது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் இலவசமாக தங்கி செல்வதற்காக இந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.  

ஆனால், நாளடைவில் இந்த நிலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு, ஓட்டல் உள்ளிட்ட பல தொழில்கள் நடக்கத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த அறக்கட்டளை பெயரில் இருந்த இந்த சொத்துக்கள் அனைத்தும், ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வாகத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலத்தை மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து, தமிழக வருவாய் துறை முதன்மை செயலாளர் கடந்த  -2013-ம் ஆண்டு செப்டம்பர் 28- -ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார். 

இந்த அரசாணையின் அடிப்படையில், இந்த இடங்களில் குத்தகை மற்றும் வாடகை இருப்பவர்களை நிலத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி  சென்னை கலெக்டர் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அங்கு கடைகள் நடத்தி வருபவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன்,  வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அங்கு ஓட்டல் நடத்தி வரும் புஹாரி அண்டு சன்ஸ் நிறுவனம் உட்பட பலர் பேர் ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். 

இந்த அப்பீல் மனுவை நீதிபதிகள் வி.தனபாலன், எஸ்.துரைசாமி ஆகியோர் விசாரித்து  202 பக்கங்கள் கொண்ட  தீர்ப்பை நேற்று மாலை பிறப்பித்தனர். அதில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே உள்ள நிலம், தற்போது ஐகோர்ட்டு நிர்வாகத்துக்கு கீழ் செயல்படும் (ஐகோர்ட்டு) சொத்தாட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்றால், தமிழக அரசு சிவில் கோர்ட்டில்தான் வழக்கு தொடர்ந்து இருக்கவேண்டும். 

ஆனால், அதற்கு மாறாக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு ஒரு அரசாணையின் மூலம் இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக அரசு அதிகாரிகள் சட்டத்தை பின்பற்றி நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அவர்கள், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் செயல்களை பார்க்கும்போது,  ஒரு அரசாணையின் மூலம், அந்த நிலத்தை உள்ளவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது.  அதேநேரம், மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக இந்த நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்வது தொடர்ப்õக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு இந்த ஐகோர்ட்டு கட்டுப்பட்டது என்பதால், இந்த அப்பீல் மனுவை தள்ளுபடி செய்யவேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்த நிலம் சென்னை மக்களின் நலன் உள்ளடங்கிய மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக அரசு ஆர்ஜிதம் செய்துள்ளதாலும், அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பு அளித்தும்,  கனத்த இதயத்துடன் இந்த அப்பீல் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம்.  அதேநேரம், இந்த நிலத்தை ஆர்ஜிதம் செய்ய அரசின் நிர்வாக நடவடிக்கையை சட்டப்படி  இல்லை என்ற கருத்தையும் நாங்கள் பதிவு செய்கிறோம்.  .  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!