முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலாய் ஸ்டீல் தொழிற்சாலை விபத்தில் 6 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

பிலாய், ஜூன் 14 - சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் மிகப்பெரிய உருக்கு தொழிற்சாலை உள்ளது. நேற்று அதிகாலை 6.30 மணிக்கு அந்த தொழிற்சாலையின் தண்ணீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அந்த தண்ணீர் குழாயை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது குழாயின் ஒரு பகுதி உடைந்தது. அதில் இருந்து வாயு கசிந்தது. அந்த வாயு கசிவு தொழிற்சாலையின் ஒரு பகுதி முழுவதும் பரவியது. இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். 

வாயு கசிவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால் 6 பேர் தொழிற்சாலையின் 2வது பிரிவுக்குள்ளேயே மயங்கி விழுந்து பலியானார்கள். 35க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாயு கசிவை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிருக்கு போராடினார்கள். உடனடியாக இது பற்றி மீட்பு குழுவினருக்கும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 35 ஊழியர்களையும் மீட்டு பிலாய் நகர மருத்துவமனைகளில் சேர்த்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 6 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வாயு கசிவில் 6 பேர் பலியாகி விட்ட தகவல் அறிந்ததும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பிலாய் உருக்கு தொழிற்சாலைக்கு வருவாய் துறை மந்திரி பிரேம் பிரகாஷ் பாண்டே மற்றும் ஒரு மந்திரியை அனுப்பி வைத்தார். இரண்டு மந்திரிகளும் பிலாய் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டனர். இதை தொடர்ந்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிலாய் உருக்கு தொழிற்சாலை ஆண்டுதோறும் 3.9 மில்லியன் டன் உருக்கை உற்பத்தி செய்கிறது. செயில் நிறுவனம் இங்கு ரூ. 18 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதுவரை இந்த தொழிற்சாலையில் இவ்வளவு அதிக உயிரிழப்பு ஏற்பட்டது இல்லை. உயிரிழந்தவர்களில் 3 பேர் தொழிற்சாலையின் துணை மேலாளர்கள் ஆவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் வாயு கசிவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!