முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 1-ம் தேதிக்கு முன் தனியார் தடுப்பூசி மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மே 1-ம் தேதிக்கு முன் தனியார் தடுப்பூசி மையங்களை கூடுதலாக உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு கடிவாளம் போடும் வகையில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1-ம் தேதி முதல் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது.

இதற்காக மாநிலங்கள் மேற்கொண்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மைக்குழு தலைவர் சர்மா ஆகியோர்  ஆய்வு செய்தனர். இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

3-ம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் 1-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன் கூடுதல் தனியார் தடுப்பூசி மையங்களை உருவாக்க மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இதற்காக தனியார் ஆஸ்பத்திரிகள், தொழில்துறை ஆஸ்பத்திரிகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி மேற்படி மையங்களை உருவாக்க வேண்டும். 

இந்த மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுதல், பக்க விளைவுகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவித்தல் மற்றும் நிர்வகித்தல், கோவின் இணையதளத்தை பயன்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த சட்டம்-ஒழுங்கு அதிகாரிகளுக்கு உதவுதல் போன்ற பயிற்சிகளை வழங்க வேண்டும்.

தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் தனியார் ஆஸ்பத்திரிகளை கண்காணித்தல், கோவின் இணையதளத்தில் கையிருப்புகள், விலை பட்டியலை வெளியிடுதல், தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அட்டவணைகளை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.  தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் 18 முதல் 45 வயது வரையிலான பிரிவினருக்கு ஆன்லைன் மூலமான முன்பதிவு மட்டுமே செய்ய வேண்டும்.

கொரோனா சிகிச்சை பணிகளுக்கு கூடுதல் ஆஸ்பத்திரிகளை அடையாளம் காண வேண்டும். டி.ஆர்.டி.ஓ. அல்லது அதுபோன்ற நிறுவனங்களின் மூலம் கள ஆஸ்பத்திரி வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பிற முன்கள பணியாளர்களுக்கு நியாயமான மற்றும் வழக்கமான ஊதியத்தை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து