முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் தலைமறைவான சுஷில் குமார் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்: டெல்லி போலீஸ்

செவ்வாய்க்கிழமை, 18 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொலை வழக்கில் தலைமறைவான பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு டெல்லி காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது. அதன்படி சுஷில் குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், அவர் நண்பர் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அறிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த 37 வயது சுஷில் குமார், மல்யுத்தப் போட்டியில் இரு ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வென்றவர். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கமும் வென்றார். 

சாகர் ராணா மரணம்

இந்திய ரயில்வே ஊழியரான சுஷில் குமார், வடக்கு டெல்லியில் உள்ள சத்ரசால் மைதானத்தில் சிறப்புப் பணியில் இருந்தார். அந்த மைதானத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர் சாகர் ராணா கடுமையாகத் தாக்கப்பட்டார். இதனால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. இதனால் மோதலில் ஈடுபட்ட சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாரண்ட் பிறப்பிப்பு

இதையடுத்து பத்து நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்கள் சுஷில் குமாரும் அவருடைய நண்பர்களும். இவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

லுக்அவுட் நோட்டீஸ் 

இந்த சம்பவம் நடந்தபின், சுஷில் குமார் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் சென்றுள்ளார். பின்னர் சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வருகிறார். இதனால் சுஷில் குமார் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். இதனையடுத்து, சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் மீது டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.

சன்மானம் அறிவிப்பு

 

இந்நிலையில் சுஷில் குமார் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சமும் அவருடைய நண்பர் அஜய் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் சுஷில் குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து