முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வை தடுக்க தி.மு.க. அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

சென்னை பெருங்குடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11,490 பேர் பயன் பெறும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் வசிப்போருக்கு இன்று(நேற்று) முதல் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழகத்தில் இந்த நிமிடம் வரை நீட் தேர்வு உள்ளது. தமிழக அரசு சார்பில் சட்டப் போராட்டம் என்பது தொடரும். தி.மு.க. அரசு என்றும் நீட் தேர்வுக்கு எதிரானது. நீட் தேர்வினை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்.

நீட் தேர்வு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை பத்து நாட்களில் வர உள்ளது. இதன் பின்னர் அது ஜனாதிபதியிடம் வழங்கப்படும். ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு 42 லட்சம் தடுப்பூசி வருவதாக கூறியிருந்த நிலையில், அதில் மீதம் 18 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி எண்ணிக்கையை மத்திய அரசு 71 லட்சமாக உயர்த்தி தருவதாகவும் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை கொடுத்தாலும் அதனை செலுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து