முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சார்பட்டா பரம்பரை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு ஜெயக்குமார் கண்டனம்

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடசென்னை மக்களிடையே 70-களில் குத்துச்சண்டை போட்டி மீது இருந்த ஆர்வம் குறித்து இந்த திரைப்படம் விரிவாக சித்தரிக்கிறது.

அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழகத்தில்  நிலவிய அரசியல் சூழலை பா.ரஞ்சித், வெளிப்படையாக காட்சிப்படுத்தியுள்ளார். இது ஒரு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றாலும், சிலர் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதை வைத்து இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது சார்பட்டா பரம்பரை படத்துக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆருக்கும், விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திரைப்படம் முழுக்க முழுக்க தி.மு.க.வின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.  குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்.ஜி.ஆர். தான் என்றும் 1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதற்காக நாக் அவுட் நாயகன் முகமது அலியை எம்.ஜி.ஆர். சென்னைக்கு அழைத்து வந்தார் என்றும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சார்பட்டா பரம்பரை திரைப்படம் தி.மு.க. ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர். அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்.ஜி.ஆரை சார்பட்டா பரம்பரை படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து