முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாநிலங்களில் 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2022      இந்தியா
snowfall--2022 12 20

டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் சமீப சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனித்திரை வாகன ஓட்டிகளின் பார்வையை மறைப்பதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படும் நிலையில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்படியும் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. இந்தநிலையில், டெல்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டத்தினால் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, இமாசலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடும் பனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 2 நாள்களுக்கு ராஜஸ்தான், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், 50 மீட்டர் வரை பார்வை நிலை குறைந்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தில் கடும் மூடுபனி காரணமாக, குறைந்த பார்வைத்திறன் இருந்ததால் 32 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஆர்ஓ வடக்கு ரயில்வேயின் தகவலின்படி, மொராதாபாத்தில் அடர்த்தியான மூடுபனி காரணமாக 32க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். 

பனிமூட்டம் காரணமாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் கார் தந்தூர் கிராமத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலாவின் வாகனம் ஹிசாரில் இருந்து சிர்சா நோக்கி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. கடும் மூடுபனியால் குறைந்த பார்வைதிறன் காரணமாக முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்தததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் துணை முதல்வர் எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக உயிர் தப்பினார். அவரது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து