முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் அருகே மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது : 144 தடை உத்தரவு வாபஸ்

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Aricikkompa 2023-06-05

Source: provided

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்திய அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்பு கும்கி யானைகள் மூலம் லாரியில் ஏற்றி களக்காடு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து 144தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் அரி கொம்பன் யானை என்ற பெயரிட்டு அழைத்தனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு தமிழக எல்லையான பெரியாறு புலிகள் காப்பகம் முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது.

இந்த யானை கண்ணகி கோயில் வழியே மேகமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 27-ம் தேதி இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். கூச்சல், வாகனங்களின் ஹாரன் இரைச்சலால் மிரண்டு போன இந்த யானை கம்பம் துணை மின் நிலையம் அருகே சென்றது. பாதுகாப்பு கருதி கம்பம், புதுப்பட்டி பகுதி மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மேகமலை புலிகள் வன சரணாலய துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலூர், கம்பம் வனச்சரகர்கள் முரளிதரன், அன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கம்பம் நகரட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புறவழிச்சாலை அருகே யானை உலாவந்ததால் அப்பகுதி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து மேகமலை பகுதிக்கு இந்த யானை இடம் பெயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து யானை மீண்டும் நகருக்குள் வந்து விடாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக சண்முகாநதி அணை நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தயானை இடம் மாறிக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை எரசக்க நாயக்கனூர் அருகே பெருமாள்கோயில்பட்டி எனும் பகுதிக்கு யானை வந்தது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் இதற்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்பு கும்கி யானைகள் மூலம் இதனை வனத்துறை லாரியில் ஏற்றினர். பிடிபட்ட இந்த யானைக்கு பலரும் பிரியாவிடை அளித்தனர். வழிநெடுகிலும் கை அசைத்து வழிஅனுப்பி வைத்தனர். இந்த யானை உத்தமபாளையம், சின்னமனூர், தேனி வழியே கொண்டு செல்லப்பட்டது.

துதிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் இந்தயானைக்கு காயம் உள்ளதால் உரிய சிகிச்சை அளித்த பிறகே இவற்றை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டதால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

எங்கே விடப்படுகிறது? 

அரிக்கொம்பன் யானை தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளையில், அரிக்கொம்பன் யானை அடர் வனப்பகுதியில் விடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் விடப்படவுள்ளதாகவும், அரிக்கொம்பன் யானையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து