முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கங்களில் பெயரை வைத்து கிளம்பிய சர்ச்சை கொல்கத்தா உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      இந்தியா
Cort 2023 04 17

Source: provided

கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்கிற இரு சிங்கங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சஃபாரி பூங்காவிற்கு பிப்ரவரி 12-ம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு ‘அக்பர்’ என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு ‘சீதா’ என்றும் பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடியது.

மனுவில், “சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியதை மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்த விஸ்வ ஹிந்து பரிஷத், “மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு பெயரிட்டுள்ளது. அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர். சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம். மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர்’ உடன் ‘சீதா’வை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது” என்று கோரியது.

விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, “இந்தப் பெயரை யார் வைத்தது? நீங்கள் ஒரு பொதுநல அரசு, மதச்சார்பற்ற அரசு. ஏன் சிங்கத்துக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அக்பர் மிகவும் திறமையான மற்றும் உன்னதமான முகலாய பேரரசராக இருந்தார். மிகவும் வெற்றிகரமான மற்றும் மதச்சார்பற்ற முகலாய பேரரசர் அவர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், மத போராளிகள், மரியாதைக்குரியவர்கள் பெயர்களை இனி விலங்குகளுக்கு சூட்ட வேண்டாம். சர்ச்சைகளை தவிர்க்க இரண்டு சிங்கங்களின் பெயர்களை மாற்றுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து