முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்: கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தி.மு.க.

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      தமிழகம்
Metro-train 2023 05 02

கோவை, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கோவை தொகுதிக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனை ஒட்டி,  அனைத்து கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில்,  நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு என தனிப்பட்ட தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இந்நிலையில், தற்போது தி.மு.க. சார்பில் கோவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளரின் தேர்தல் அறிக்கையின் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு., கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசு கட்டுப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன்,  ஏரிகளில் கழிவு நீர் கலப்பதும் தடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும். கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படும்.  நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும்.  முதல் கட்ட பணிகள் உரிய கால நேரத்திற்குள் தொடங்கி முடிவடையும். சிறுவாணி,  பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு-குறு தொழில் சட்டம் 2006ல் உள்ள பிரிவு 43 பிஹெச் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில்நுட்ப ஜவுளித் துறையில் உள்ள சிறு மற்றும் குறு தொழில் II நிறுவனங்களின் (MSME) நவீனமயமாக்கல் மற்றும் திறன் மேம்பாடு அரசு மானியங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும். வெட் கிரைண்டர் ஆலை மற்றும் மோட்டார் பம்ப் தயாரிப்பாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, சிறு, குறு தொழில்களுக்கான புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் அவர்களின் தொழில் சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பூங்காவிற்குள், காட்சி அரங்கம் உட்பட கிரில் தயாரிப்பாளர்களுக்கான பிரத்யேக பிரிவு அமைக்கப்படும். பம்புசெட் மற்றும் உதிரிபாகத் தொழில்களில் உள்ள ஜிஎஸ்டி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோழிப் பண்ணை விவசாயிகளின் தீவனம், மின்சாரம் மற்றும் இதர பிரச்சினைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்க்கப்படும்.நகருக்குள் வாடகைக் கட்டடங்களில் இருக்கும் குறுந்தொழில்களுக்கு புதிய தொழில் பூங்காவில் கடை அமைக்க வாய்ப்புகள் வழங்கப்படும். 

தமிழகத்தில் 7 லட்சம் வெல்டர்களுக்கு உதவும் வகையில், விபத்து நிவாரணத் திட்டம் உட்பட வெல்டர்களுக்கான நல வாரியம் ஏற்படுத்தப்படும். விசைத்தறி வளர்ச்சி கவுன்சில் உருவாக்கப்பட்டு மின்சார செலவு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளும் கவனித்துத் தீர்க்கப்படும். தென்னை விவசாயிகளின் விருப்பத்திற்கு இணங்க நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். காற்றாலை உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கூடிய வகையில் புதிய கொள்கை உருவாக்கப்பட்டு, காற்றாலை பேங்கிங்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலானக் கொள்கை அறிவிக்கப்படும். உலோக வார்ப்பு தொழிலுக்கான மனிதவள திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். எல் அண்ட் டி பைபாஸ் நான்கு வழிச்சாலையாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து