முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை

சனிக்கிழமை, 18 மே 2024      உலகம்
Kyrgyzstan 2024-05-18

Source: provided

பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தி  உள்ளது. 

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகங்களில் பயிலும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கிடையே சமீபத்தில் மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து அங்குள்ள பல்கலைக் கழகத்தின் சில விடுதிகள் தாக்கப்பட்டன. 

இதில், வெளிநாட்டு மாணவர்களும் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கிர்கிஸ்தான் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பத்திரமாக இருக்கும்படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவுரை வழங்கியுள்ளன.

இந்நிலையில், கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

நாங்கள் நம் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம். 

அவசர தேவைகளுக்கு தூதரகத்தை தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் எண் வழங்கியுள்ளோம். 0555710041 என்ற எண்ணில் மாணவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தூதரகத்தின் மேற்கண்ட பதிவை மறுபகர்வு செய்து, பிஷ்கேக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலனை கண்காணித்து வருகிறேன். 

தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு மாணவர்களை தீவிரமாக அறிவுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

சில மருத்துவ பல்கலைக் கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் தாக்கப்பட்டுள்ளன. சில  வலைதள வீடியோக்களில் பாகிஸ்தான் மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் அங்கு பயிலும் சர்வதேச மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து