முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் மே தின விழாவில் முதல்வர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: தொழிலாளர்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு தொழிலாளர் தோழர்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிழும் திருநாள்...

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, மே தினப் பூங்காவில் நேற்று நடைபெற்ற மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உருண்டோடுகின்ற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி தான். இழையை நூற்று நல்லாடை நெய்பவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவன் யார் என்று கேட்டால் அவரும் தொழிலாளி தான். மிராசுதாரர்கள் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்கித் தரக்கூடியவர்கள் தொழிலாளியாக தான் இருக்கிறார்கள். கடலில் மூழ்கி முத்து எடுப்பவனும் தொழிலாளியாக தான் இருக்கிறான். உழுது நன்செய் பயிரிடுபவனும் தொழிலாளி தான். அந்தத் தொழிலாளியின் இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள்தான் மே தினம் என்று நம்முடைய அண்ணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

திராவிடர்கள் என்றாலே...

அத்தகைய சிறப்புமிக்க, தொழிலாளர் தோழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள்தான் என்று பெரியார் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 1932-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தவர் தான் தந்தை பெரியார்.

தோழர்கள் என்று அழைக்க... 

ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டு தாயகமாம் தமிழகத்திற்கு திரும்பிய தந்தை பெரியார், இனி அனைவரையும் தோழர்கள் என்று அழைக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள். நம்முடைய சென்னை நகரம் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க செயல்பாடுகளின் முக்கிய மையமாக இருந்தது. எட்டு மணி நேரம் வேலை எனும் உரிமைப்போரில் வென்றதற்கு இந்தியாவிலேயே முதன்முதலில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது இந்த சென்னை மாநகரத்தில் தான் என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

ஊதியத்துடன் விடுமுறை....

அதற்கும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக குறைக்க பெரும் முயற்சிகளை நீதிக் கட்சித் தலைவரான டி.எம்.நாயர் எடுத்திருக்கிறார். 'உழைப்புக்கு மதிப்பளிப்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று சொன்னால், உழைப்பவனுக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அண்ணா. அதன்படியே, 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா கொண்டு வந்தார்.

சட்டமாக்கினார் கருணாநிதி... 

அதற்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். அதற்கு பிறகு சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மே 1 நம்முடைய மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலத்திற்கும் தொழிலாளர் தினத்தை ஊதியத்தோடு கூடிய விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, கருணாநிதி அதையும் நிறைவேற்றி தர பாடுபட்டார் என்பதும் உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

எத்தனையோ சாதனைகள்...

இந்தப் பகுதியில் இங்கே நின்று கொண்டிருக்கிறோமே இந்த மே தின பூங்கா இதையும் உருவாக்கித் தந்தவர் தான் கருணாநிதி. பூங்காவை மட்டும் அல்ல, அதில் உள்ளே அமைந்திருக்கக்கூடிய நாங்கள் எல்லாம் சென்று மலர் வளையம் வைத்து, எங்கள் அஞ்சலியை, எங்கள் மரியாதையை, வணக்கத்தை செலுத்திவிட்டு வந்திருக்கிறோமே அந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கருணாநிதிதான் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு எடுத்துச் சொல்லி, இன்றைக்கு தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் மூலமாக இந்த 4 ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ சாதனைகளை தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கக்கூடிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கக்கூடிய இந்த நேரத்தில், அதிலும் குறிப்பாக தொழிலாளர்களுக்காக செய்திருக்கக்கூடிய சாதனைகள் ஒன்றிரண்டை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால்,

நலத்திட்ட உதவிகளை... 

கடந்த நான்காண்டு காலத்தில் 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரத்து 461 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம். உணவு மற்றும் பிற பொருள்களை டெலிவரி செய்யும் (கிக்) தொழிலாளர்களுக்கும், தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியத்தை அமைத்திருக்கிறோம். பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, அதையும் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் சிலையை... 

20 அமைப்பு சாரா தொழிலாளர் வாரியங்களில், 2021-24 காலக்கட்டத்தில் 16 லட்சம் ஊழியர்கள் புதிதாக பதிவு செய்திருக்கிறார்கள்.  கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அமரும் உரிமையை கட்டாயமாக்கி அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, உலக மாமேதை பொதுவுடைமை தத்துவத்தை அளித்த பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னையில் அமைப்போம் என்று நாம் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறோம். அதுவும் விரைவில் அமைக்கப்பட இருக்கிறது.

எவ்வளவு பேருக்கு வேலை.... 

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இதன் மூலமாக, தொழிலாளர்களும் வளர்ந்து வருகிறார்கள். தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது மாதிரியே தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தாலும், எந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலும், அப்போது நான் முதலாவதாக கேட்பது என்னவென்றால், எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள் என்ற கேள்வியைத்தான்.

சமப்படுத்த வேண்டும்...

வேலை தருபவர் - பணியாளர் ஆகியோர் இடையிலான உறவை சமரசத்தின் மூலமாக நாம் சமப்படுத்த வேண்டும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அப்படித்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்களுக்காக, சாமானியர்களின் ஆட்சி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். என்றைக்கும் உங்கள் கூட - உங்களுக்காக நிற்கும், உங்களில் ஒருவன்தான் நானும், நம்முடைய அரசும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம், கொள்கையாக வைத்து இலக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை மனதில் வைத்துதான் அரசு பல திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது.

4-வது ஆண்டு நிறைவு....

இன்னும் ஒரு வார காலத்தில், திராவிட மாடல் ஆட்சி உருவாகி, 4-வது ஆண்டை நிறைவு செய்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். எனவே, மே தினம் கொண்டாடக்கூடிய இங்கே இருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்காக உழைக்கின்ற, பாடுபடுகின்ற இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் உறுதுணையாக இருந்து இந்த ஆட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அந்த உறுதியை இந்த நல்ல நாளில் எடுத்துக் கொள்வோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

''1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மே-1 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அண்ணா கொண்டு வந்தார். அதற்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி அந்த மே 1 விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தார். மே தின பூங்காவை மட்டும் அல்ல, நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கருணாநிதிதான்.''

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து