முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயார் - கடாபி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, மார்ச் 24 - நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயார் என்று லிபியா அதிபர் மும்மர் கடாபி தெரிவித்துள்ளார். லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டு அதிபர் மும்மர் கடாபி ஆட்சி செய்துவருகிறார். நீண்டுகாலமாக இருந்துவரும் இவரது சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர லிபிய மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு படைகளுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சிப் படைகள் போரிட்டு வருகின்றன. இதனால் லிபியாவில் பதட்டமும், பீதியும் அதிகரித்துள்ளது. உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை அரசு படைகள் கொன்று குவித்து வருகின்றன. இதனால் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், கடாபியின் அரசு படைகளுக்கு எதிராகவும் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டுப் படைகள் விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஆரம்பம் முதலே அமெரிக்காவின் எதிரியாக இருந்துவரும் கடாபி, அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளின் தாக்குதலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இந்த கூட்டணி நாடுகளின் தாக்குதலை முறியடித்து வெற்றி பெறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். பன்னாட்டு படைகளின் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு கடாபி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், அமெரிக்க தாக்குதலை முறியடித்து வெற்றிபெறுவோம் என்று சபதம் செய்தார். நாட்டுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில் பன்னாட்டு படைகளை இப்போதும் தோற்கடிப்போம். எப்போதும் தோற்கடிப்போம் என்று கடாபி முழக்கமிட்டார்.  பன்னாட்டு படைகளின் தாக்குதல் அநீதியான ஆக்கிரமிப்பு என்று கூறிய கடாபி, மேற்கத்திய நாடுகளை வசைமாரி பொழிந்தார். லிபியா தலைநகர் திரிபோலியில் பன்னாட்டு படைகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. பன்னாட்டு படைகளுக்கு எதிரான தனது யுத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுத்தமாக இருக்கும் என்று 68 வயதான கடாபி ஆக்ரோஷமாக கூறினார். கடாபின் இந்த பேச்சு லிபிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் தனது வீட்டின் பால்கனியில் இருந்து கடாபி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்