முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்றி மறந்த குஷ்புவும் - சுயநல வடிவேலுவும்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

மதுரை,ஏப்.2 - தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு அணிகளிலுமே நட்சத்திர பட்டாளங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க அணியில் சரத்குமார், ஆனந்தராஜ் போன்ற நடிகர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. அணியில் பழைய நடிகர் பாக்யராஜ், இட்லி புகழ் குஷ்பு மற்றும் வடிவேலு ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

இவர்களில் குஷ்புவை நன்றி மறந்தவர் என்று அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். சினிமாவில் வாய்ப்பில்லாமல் சிங்கி அடித்துக் கொண்டிருந்த போது குஷ்புவுக்கு வாய்ப்பு அளித்தது ஜெயா தொலைக்காட்சிதான். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். தற்போது இந்த நிகழ்ச்சியை நடிகை நதியா திறம்பட நடத்தி வருகிறார். 

ஆனால் இதற்கு முன்பு குஷ்புதான் நடத்தி வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிகழ்ச்சியை நடத்த அவருக்கு வாய்ப்பு கொடுத்தது அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். இந்த நிகழ்ச்சியின் மூலம் குஷ்புவுக்கு கணிசமான தொகை கிடைத்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் மறந்து விட்டு இன்று தி.மு.க பக்கம் போனதோடு மட்டுமின்றி ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி விமர்சித்து வருகிறார் குஷ்பு. இது அவரது நன்றி கெட்ட தனத்தையே காட்டுவதாக அ.தி.மு.கவினர் வேதனைப்படுகின்றனர்.  

தன்னையும், தன் மீதான வழக்குகளில் இருந்தும் தன்னை காப்பாற்றிக் கொள்ள குஷ்பு எங்கு வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் செய்நன்றி மறக்கலாமா? என்பதுதான் மக்களுடைய கேள்வியாக உள்ளது. 10 ஆண்டு காலம் ஜெயா தொலைக்காட்சியில் பணியாற்றி விட்டு திடீரென தி.மு.க. பக்கம் போய் தனக்கு வாழ்வு கொடுத்த ஜெயலலிதாவையே குஷ்பு வசை பாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று பொதுமக்களே சொல்கிறார்கள். 

வடிவேலு கதையும் இப்படித்தான். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் என்ன பிரச்சினை என்பது நாடறிந்த விஷயம். தன்னுடைய சொந்த பகையை வடிவேலு வேறு வகையில் தீர்த்திருக்கலாம். நான் எந்தக் கட்சிக்கும் போக மாட்டேன். நடுநிலையானவன் என்றெல்லாம் சொல்லி வந்த வடிவேலு, இப்போது சுயநலத்திற்காக, தன் பகையை தீர்த்துக் கொள்வதற்காக தி.மு.க. பக்கம் போயிருக்கிறார். அது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் திட்டங்கள் வரும்... ஆனால், வராது... என்று வாய்க்கு வந்தபடி சினிமா பாணியில் இவர் பேசுகிறார். நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் அரசியலுக்கு வரவில்லை. 

விஜயகாந்தை பழி தீர்க்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாக இருக்கிறது. ஆக, வடிவேலு ஒரு சுயநலக்காரர் என்பதை தன்னுடைய பேச்சு மூலம் நிரூபித்து வருகிறார். ஒரு நகைச்சுவை நடிகர் நடுநிலையாக இருந்தால்தான் அவர் காலம் ஓடும். இல்லாவிட்டால் அவரது எதிர்காலம் பாதியிலேயே அஸ்தமிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்