விஜய்குமார் ராணுவத்தில் இருந்து விலக முடிவு...!

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - இந்திய ராணுவத்தில் உரிய பதவி உயர்வும், கவுரவமும் வழங்கப்படாததால் ராணுவ பணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய்குமார் தெரிவித்துள்ளார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார் (25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட்பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-இந்திய ராணுவத்தில் பணியாற்றும் எனக்கு துப்பாக்கி சுடுதலுக்கு தேவையான பயிற்சிகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு அன்றாட தேவைகளுக்கான செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. 

     கடந்த 2006ம் ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ளேன். கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றேன். ஆனால் ராணுவத்தில் எனக்கு ஒரு பதவி உயர்வோ, பாராட்டு விருதோ அளிக்கவில்லை. எனது பதவி உயர்விற்கு பரிந்துரை கூட செய்யப்படவில்லை. இதனால் பல பதக்கங்களை வென்றாலும், நான் சுபேதாராகவே பணியாற்றி வருகிறேன். சிறப்பாக செயல்படும் ஒருவருக்கு மூத்த அதிகாரிகளால் பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் அளிக்கப்படவில்லை.

   கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஹரியானா, பஞ்சாப் உட்பட பல மாநிலங்கள் பதவி உயர்வை வழங்கியது. ஆனால் தேசிய, சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கும் இமாச்சல பிரதேச அரசின் பரசுராம், இமாச்சல கவுரவ் போன்ற விருதுகள் கூட எனக்கு அளிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பிறகு கூட எனக்கு பதவி உயர்வு வழங்க மறுத்தால் ராணுவத்தில இருந்து விலகி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

       ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இவருக்கு, இமாச்சல பிரதேச அரசு ரூ.1கோடி பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்குமாரை சமாதானப்படுத்தி பதவி உயர்வு மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: