முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பாதுகாப்பு ஒத்திகையால் விடிய விடிய பரபரப்பு

வெள்ளிக்கிழமை, 7 டிசம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.7 -​ பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், ராஜேஷ் தாஸ் ஆகியோரது மேற்பார்வையில், அனைத்து இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இரவு 8 மணி அளவில் பாதுகாப்பு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். சென்னையில் 12 போலீசார் தீவிரவாதிகள் போல டம்மி வெடிகுண்டு பைகளுடன் ஊடுருவி உள்ளனர். அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும். இவர்களை பிடிக்காமல் கோட்டை விடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷாரானார்கள். தீவிரவாதிபோல நுழைந்திருப்பவர் கருப்பு சட்டை அணிந்திருப்பார் என்ற அடையாளத்தை தவிர வேறு எந்த தகவலும் போலீசுக்கு அளிக்கப்படவில்லை. இதனால் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என அத்தனை பேரையும் மடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.

க்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அடையாறு, தி.நகர், பரங்கிமலை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்ர், புளியந்தோப்பு, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய 12 போலீஸ் மாவட்டங்களில் இருந்தும் அனுப்பப்பட்ட 12 போலீஸ்காரர்களும் தோளில் டம்மி வெடிகுண்டு பைகளுடன் தனித்தனியாக சுற்றி வந்தனர். இவர்களை பிடிப்பதற்காக ரோந்து சுற்றி வந்த போலீசார், இரவு 9 மணியில் இருந்து விடிய விடிய தூக்கத்தை தொலைத்து பணியில் ஈடுபட்டனர். இதன் பயனாக ஒருவர் பின் ஒருவராக 12 பேரும் விடியும் முன்னர் போலீசில் சிக்கினர்.

இந்த பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நேற்று முன்தினம் இரவு சென்னையில் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு ஆயுதப்படை போலீசார் 1000 பேர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். எந்த பகுதியிலாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் என தெரிந்தால் அவை நடைபெறாமல் இருக்க உடனடியாக இவர்கள் அங்கு விரைந்து சென்றனர். 4 தனித்தனி குழுக்களாக இவர்கள் பிரித்து வைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையின் கீழ் இயக்கும் இந்த சிறப்பு படை போலீசார் எந்த பகுதியிலாவது பிரச்சினை என்றால் அங்கு 5 நிமிடத்தில் சென்று விடுவார்கள்.

இதற்கிடையே மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டதால் ஆவேசம் அடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் சென்னையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் ஒருவர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்