முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்தில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா,ஏப்.22 - மேற்கு வங்க மாநிலத்தில் 2 ம் கட்ட தேர்தல் நாளை சனிக்கிழமையன்று 50 சட்டமன்ற தொகுதிகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. 

தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த 13 ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் கமிஷன் பல்வேறு கிடுக்கிப்பிடிகளை போட்டு இந்த தேர்தலை நடத்தி முடித்துள்ளது. இதன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. இருந்தாலும் கூட ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ஆணைய கெடுபிடிகளையும் மீறி பணப்பட்டுவாடா நடந்துள்ளது. வாகன சோதனையின் போது கோடிக்கணக்கான பணம் சிக்கியது. ஆனால் அதை உரிமை கோரத்தான் ஆளில்லை. 

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடக்கிறது. இதனிடையே மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபடி கடந்த 18 ம் தேதி அம்மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. கிட்டத்தட்ட 54 தொகுதிகளில் அப்போது வாக்குப் பதிவு நடந்தது. வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல் கட்ட தேர்தலின் போது 74 சதவீதம் வாக்குகள் பதிவாயின. 

இப்போது 2 ம் கட்ட தேர்தல் நாளை 50 தொகுதிகளில் நடக்கவிருக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. முன்னதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும், இ. கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி தலைவர்களும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்தனர். மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஒரு கூட்டத்தில் பேசிய போது திரிணாமுல் காங்கிரசார் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். இந்த பணம் எங்கிருந்து வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜியும் இம்மாநிலத்தில் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளின் நீண்ட கால ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டி எப்படியாவது இம்முறை பதவிக்கு வந்து விட வேண்டும் என்று துடிக்கிறார் மம்தா பானர்ஜி. 

திரிணாமுல் காங்கிரசுக்கும், இடது முன்னணிக்கும் இடையே இம்மாநிலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை 2 ம் கட்ட வாக்குப்பதிவு 50 சட்டமன்ற தொகுதியில் நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது தில்லுமுல்லுகளை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 27 ம் தேதி இம்மாநிலத்தில் 3 வது கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. மொத்தம் 6 கட்டங்கள் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை 13 ம் தேதி நடைபெறும். அப்போது இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்