முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களிங்கராயனுக்கு சிலை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.20 - ஈரோடு மாவட்டத்தில் நாகவம்பாளையம் பகுதியில் நதிகள் இணைப்பில் முன்னோடியான வரும் மக்களிடையே பல அறப்பணிகள் செய்தவருமான காலிங்காரயனுக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

விவசாயத்திற்கு இன்றியமையாததாக விளங்கும் நீர் கிடைக்கப் பெறும் வகையில் அணைக்கட்டுகளை உருவாக்கிய பெரியோர் நினைவைப் போற்றும் வகையில் 

மணி மண்டபங்களை எனது தலைமையிலான அரசு அமைத்து வருகிறது.  அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் பென்னிகுவிக்கும் நினைவு மண்டபம் எனது அரசால் அமைக்கப்பட்டுள்ளது.   கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டிய கரிகால் பெருவளத்தான் அவருக்கும் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகள் பாசனம் பெற நற்பணி ஆற்றியவர் காலிங்கராயன் ஆவார். ஈரோடு மாவட்டத்தின் அணிகலனாகத் திகழ்வது காலிங்கராயன் கால்வாய் ஆகும். இந்த காலிங்கராயன் கால்வாயை கட்டிய பெருமை லிங்கையன் என்கிற காலிங்கராயன் என்பவரையே சாரும். காலிங்கராயன் பாண்டிய நாட்டு தலைவர் ஆன பிறகு, தன் ஆளுகைக்குட்பட்ட புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, நாட்டு மக்களின் உதவியுடன் காலிங்கராயன் அணையினைக் கட்டி, கால்வாயினையும் வெட்டினார் என்பது வரலாறு. 

காவிரி ஆற்றின் கிளை நதிகளான பவானியையும், நொய்யலையும் இணைக்கும் கால்வாய் காலிங்கராயன் கால்வாய். இதன் மூலம் பவானி ஆற்றிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்பட்டு, காவிரி ஆற்றின் ஓரமாகவே அதன் தென் கரையில் சுமார் 56 மைல்கள் கிழக்காக ஓடி ஆவுடையார் பாறை என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் சங்கமமாகிறது.

பவானி ஆற்றை நொய்யல் ஆற்றுடன் இணைக்க 32 மைல் தூரம் கால்வாய் வெட்டினால் போதும் என்ற நிலை இருந்த போதிலும், அதிகமான நிலங்கள் பாசனம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும், நீர் தேங்கி நின்று வயலுக்குப் பாய வேண்டும் என்ற எண்ணத்துடனும், நீரின் வேகத்தைக் குறைத்து கரைக்கு வெள்ளத்தினால் ஏற்படும் அழிவுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், 56 மைல் தூரத்திற்கு இந்தக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாயின் இரு கரைகளும் காரையால் கட்டப்பட்டு இருப்பதால் காரை வாய்க்கால் என்றும், பாம்பு போல் நெளிந்து செல்வதால் கோண வாய்க்கால் என்றும் இதனை அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.  இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலம் தற்போது பாசன வசதி பெற்று வருகிறது. 

இப்படிப்பட்ட வலுவான அணையினையும், கால்வாயினையும் கட்டிக் கொடுத்தவரும், நதிகள் இணைப்பில் முன்னோடியாக விளங்கியவரும், மக்களுக்கு பல அறப்பணிகளை செய்வதவருமான காலிங்கராயன் சிலை அமைக்க வேண்டும் என்றும், காலிங்கராயனு அணைக்கட்டுப் பகுதியினை  சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எனக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, காலிங்கராயனின் சமுதாயப் பணியை போற்றும் வகையில், அன்னாருக்கு ஈரோடு மாவட்டம், அணை நாசுவம்பாளையம் பகுதியில் சிலை அமைக்கப்படும் என்பதையும், காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதி சுற்றுலாத் தலமாக அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேற்கண்டவாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்