முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலையான 41மீனவர்கள் மண்டபம் வந்து சேர்ந்தனர்

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

மண்டபம்,செப்.29- இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 41மீனவர்கள் மண்டபம் வந்துசேர்ந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த ஜுலை, ஆகஸ்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 10படகுகள் உள்பட 41மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தெரிந்ததே. இந்த மீனவர்கள் அனைவரும் இலங்கை வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஏறத்தாழ 50நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த இந்த மீனவர்கள் அனைவரும் கடந்த 25-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இந்த மீனவர்கள் வழக்கமான நடைமுறைகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் மாலை 4மணி அளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று அதிகாலை 7மணி அளவில் மண்டபம் கடற்படை முகாமிற்கு அழைத்துவந்தனர். அங்கு மீனவர்களிடம் பலமணிநேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்பின்னர் அந்த மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். பலநாட்கள் சிறையில் கழித்து நாடுதிரும்பிய மீனவர்களை கண்ட உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டித்தழுவி வரவேற்றனர். சிறையில் இருந்து விடுதலையாகி வந்த அக்காள்மடம் மீனவர் முனியசாமி கூறியதாவது:- கடந்த ஜுலை மாதம் 7-ந் தேதி ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். அங்கு இலங்கை கடற்படையினர் எங்களை சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை என்ற பெயரில் எங்களை மட்டையால் அடித்தனர். இதனால் எனது இடதுகையில் ரத்தகாயம் ஏற்பட்டது. நான் மன்னார் அரசு மருத்துவமனையில் 3நாட்கள் சிகிச்சை பெற்றேன். பின்னர் நான் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அந்த சிறையிலும் எனக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறையில் எங்களுக்கு சரியான உணவு கொடுக்கப்படவில்லை. 2நாட்கள் பட்டினி கிடந்தபின்னர் வேறு வழியின்றி அவர்கள் கொடுத்த உணவை சாப்பிட்டோம். இவ்வாறு 80நாட்களை நாங்கள் கஷ்டத்துடன் கழித்து வந்தோம். தமிழன் என்றாலே இலங்கை கடற்படையினர் பயங்கர கோபத்துடன் தாக்குகின்றனர். எனது மீன்பிடி தொழில் காலத்தில் இதுதான் பயங்கர முதல் அனுபவம் ஆகும். இதை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன்.இவ்வாறு கூறினார். விடுதலையாகி மண்டபம் வந்தடைந்த மீனவர்களை நேற்று காலை பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் இந்திய கடலோர காவல்படையினர் தாமதம்  செய்தனர். இதனால் மீனவர்களை எதிர்பார்த்து காத்திருந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மண்டபம் கடலோர காவல்படை முகாமை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் அங்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்