முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை காமன்வெல்த் மாநாட்டிற்கு திருமாவளவன் எதிர்ப்பு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,அக்.4 - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் 3_வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக தொல்.திருமாவளவன்  உண்ணாவிரதம் இருந்தார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று 3_வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.

அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தனது தொண்டர்களுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். இந்த போராட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு, கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து 3_வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும், தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு நிருபர்களிடம் கூறியதாவது:

 நான் உண்ணாவிரதம் இருப்பது என்பது நீண்டநாள் அல்ல.. இந்த போராட்டம் தமிழர்கள் மற்றும் மாணவர்களின் காதுகளுக்கு செல்ல வேண்டும். எனது கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால் பதில் எதுவும் இல்லை. உண்ணாவிரதம் இருக்கவும் தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர், கோர்ட்டுக்கு சென்றுதான் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வாங்கினேன். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். வெற்றி அல்லது வீரச்சாவு. இவ்வாறு அவர் கூறினார்.  

உண்ணாவிரதம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா தடுக்க வேண்டும், அல்லது அதில் கலந்துகொள்ளாமல் தவிர்க்க வேண்டும். காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். மேலும், இலங்கை அரசுக்கு இந்தியா போர்க் கப்பல் வழங்கக் கூடாது. கடல் அடி கம்பிவடம் மூலம் மின்சாரமும் வழங்கக் கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகு உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ளார்.

இந்த போராட்டத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்கள் வரவேற்று ஆதரவளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பிற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க ஏதுவாக, காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இந்தியா தவிர்க்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை இதுவாகும். மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்