முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசன்அலிக்கு பாஸ்போர்ட் விவகாரம் புதுவை கவர்னர் பதவிவிலகுவாரா?

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஜூலை - 7 - ஹவாலா மோசடி மன்னன் ஹசன்அலிக்கு பாஸ்போர்ட் வாங்கித்தந்த விவகாரத்தில் புதுவை கவர்னர் இக்பால்சிங்கை ஒரு வாரத்தில் பதவி விலகுமாறு மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் புதுவை கவர்னர் எந்த நேரமும் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேயைச் சேர்ந்த குதிரைப் பண்ணை அதிபர் அசன்அலி 45 ஆயிரம் கோடி அளவுக்கு ஹவாலா பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவினர் அவரை கைது செய்தனர். இந்த விசாரணையின்போது 1997ம் ஆண்டு  அசன்அலி வெளிநாடு செல்ல அப்போது எம்.பி.யாக இருந்த இக்பால்சிங்  சிபாரிசு கடிதம்  கொடுத்தது தெரியவந்தது. இதேபோன்று அசன்அலியின் நண்பர் காசிநாத் தபூரியா மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் இத்தகைய சிபாரிசு கடிதத்தை இக்பால்சிங் வழங்கியிருந்தார்.
நிழல் உலகத் தொடர்புகள், கறுப்புப்பண மோசடி, ஹவாலா பண பரிமாற்றம்  என பல்வேறு குற்றச்சாட்டுகளில் போலீசின் ரெக்கார்டில் கறுப்பு பட்டியலில் இருந்த அசன்அலிக்கு இக்பால்சிங்கின் பரிந்துரையால் பாஸ்போர்ட் கிடைத்தது. இதற்காக இக்பால் சிங்கிற்கு அசன்அலி சார்பாக பெருமளவு பணமோ அல்லது வேறு வகையான உதவிகளோ கிடைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அமலாக்கப்பிரிவினர் பலமுறை புதுச்சேரி வந்து இக்பால் சிங்கை விசாரணை செய்தனர்.
இதையடுத்து இக்பால்சிங் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து தனது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி இக்பால்சிங்கை டெல்லிக்கு அழைத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் அவரை ஒரு வாரத்துக்குள் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே இக்பால்சிங் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று கூறப்படுகிறது. இக்பால் சிங் கடந்த 2009 ம் ஆண்டு புதுவை மாநில கவர்னராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்