முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனார்த்தன ரெட்டியை தொடர்ந்து ஜெகனும் கைதாகிறார்!

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.7 - கர்நாடக மாநிலத்தில் சுரங்க தொழிலில் முறைகேடு செய்ததாக முன்னாள் பா.ஜ.க. மந்திரி ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். மகனும், கடப்பா தொகுதி எம்.பியுமான ஜெகன்மோகன் ரெட்டியும் இந்த வாரத்தில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனார்த்தன ரெட்டியுடன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால் அவரும் சி.பி.ஐ. வலையில் சிக்கப் போகிறார் என்று ஏஜன்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆரின் மகனான ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக சி.பி.ஐ.யிடம் ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கருதப்படுவதால் அனேகமாக அவர் இந்த வாரத்திலேயே கைது செய்யப்படலாம். மேலும் பாராளுமன்ற கூட்டத் தொடரும் வரும் 8 ம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் ஜெகன்மோகனை கைது செய்ய லோக்சபை சபாநாயகரிடம் அனுமதி கேட்க தேவையில்லை. அதை எப்படியாவது தவிர்த்து ஜெகன்மோகனை கைது செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் தன்னை பழிதீர்க்க காங்கிரஸ் கட்சி புலனாய்வு துறையை பயன்படுத்துகிறது என்று ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களுக்கும், தனக்கும் எந்தவிதமான வர்த்தக தொடர்புமில்லை என்றும் அவர் மறுத்துள்ளார். ரெட்டி சகோதரர்கள் கடந்த மாதம் வரை எடியூரப்பா அரசில் அங்கம் வகித்தவர்கள். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். மறைந்த பிறகு முதல்வர் பதவியை எதிர்பார்த்தார் ஜெகன்மோகன். ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து காங்கிரசை எதிர்த்து அவர் குரல் கொடுத்தார். பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு கடப்பா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியானார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தன்னை பழிதீர்க்க காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் சி.பி.ஐ. யை பயன்படுத்துகிறது என்று விவரித்தார். லோக்சபையில் தன்னை ஆதரித்து பேசிய சுஷ்மாசுவராஜூக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்