முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா பகுதியில் ரயில் மறியல் போராட்டம் 2வது நாளாகநீடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், அக்.- 17 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பிராந்தியத்தில் நேற்று இரண்டாவது நாளாக ரயில் மறியல்  போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் தெலுங்கானா பகுதி முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தத்திற்கு தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கானா பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 நாள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்திய தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு, நேற்றுமுன்தினம் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவின் மகன் ராமராவ், மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். நேற்று காலை இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு தெரிவித்து ரயில் மறியல் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களும் நீதிமன்ற காவலுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டனர். இந்தநிலையில் ரயில் மறியல் போராட்டம் 2 வது நாளாக நீடித்ததால், நேற்று தமிழகத்திலிருந்து தனி தெலுங்கானா பகுதி வழியாக வட மாநிலங்களுக்கு செல்லவேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி இன்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் தெலுங்கானா பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடியிருக்கும் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக திறக்கும்படி ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி திறக்காத பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் ஆந்திர அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்