முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இநதியாவில் ஊழல் நிறைந்த ஆட்சி மன்மோகன்சிங் ஆட்சிதான்-அத்வானி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

தென்காசி. அக். - 29 - தென்காசியில் பிரசார ரத யாத்திரை மூலம் வருகை தந்த பாஜக வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சுதந்திர இந்தியாவில் ஊழல் நிறைந்த ஆட்சி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிரான யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் பிரசார ரதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எல்.கே. அத்வானி நேற்று காலை தனது ரதயாத்திரையை மதுரையிலிருந்து துவங்கி நெல்லை மாவட்டம் சிவகிரி வழியாக வாசுதேவநல்லூர் வந்தார். அங்குள்ள தரணி சர்க்கரை ஆலையின் விருந்தினர் இல்லத்தில் மதிய உணவு மேற் கொண்டார். அதன்பின் வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், இடைகால் வழியாக மாலை 5.30 மணிக்கு தென்காசி வருகை தந்தார். தென்காசியில் பாஜக. சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் தென்காசி வேன் ஸ்டாண்டில் தனது பிரசார வாகனத்தில் நின்றபடி ஆங்கிலத்தில் பேசினார். அதனை பா.ஜ.க வின் முன்னாள் மாநில துணைத்தலைவர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார். அப்போது அவர் பேசியதாவது :- தென்காசி வாழ் சகோதர, சகோதரிகளே துவக்கத்தில் உங்கள் தாய் மொழியான தமிழில் பேசமுடியாமைக்கு வருந்துகிறேன். எனது பேச்சை எனது சகோதரர் எச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்து பேசுவார். இந்த யாத்திரை ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த நாளான அக்டோபர் 11 ம் தேதி பிகாரில் இருந்து புறப்பட்டது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மகாராஷ்ட்ரா, அருணாச்சலபிரதேசம், ஆந்திரா, ஜார்கண்ட் ஒரிஸ்ஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக இந்த யாத்திரை மூலம் தீபாவளி தினத்தில் தமிழகத்திற்கு வந்துள்ளேன். 25 ஆண்டுகளில் நான் 6 வது முறையாக நடத்துகின்ற யாத்திரை இது ஆகும். இதுவரை நடைபெற்ற 5 யாத்திரைகளில் இல்லாத அளவுக்கு இந்த யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக வலுவாக இல்லை என்றாலும் கூட மக்கள் இந்த யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் திரண்டு
வந்திருந்தார்கள். அப்போது மழை கடுமையாக பெய்த போதும் மக்கள் கலைந்து செல்லாமல் தங்கள் இருக்கைகளை தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு எனது பேச்சை கேட்டு கொண்டிருந்தார்கள். அந்த காட்சி என்னை மிகவும் நெகிழச்செய்தது.
அதைப்போலவே தென்காசியிலும் இந்த மக்கள் எனது வருகைக்காக நீண்ட நேரம் காத்து கொண்டு இருக்கிறீர்கள். இப்படித்தான் வழிநெடுக மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று எங்களை வரவேற்கிறார்கள். எனவே அவர்களை சந்தித்து பேசிவிட்டு வர தாமதம் ஆகிவிட்டது. இங்கிருந்து புறப்பட்டு இரவில் நான் திருவனந்தபுரத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். 1952 முதல் 2009 வரை இந்தியாவில் நடை
பெற்றுள்ள 15 பாராளுமன்ற தேர்தல்களை நான் பங்கு பெற்றுள்ளேன். அனைத்து பிரதமர்களையும் நான்
மிகவும் அருகில் இருந்து கூர்ந்து பார்த்து வருகிறேன். நரசிம்மராவ் அமைச்சரவையில் மன்மோகன்சிங் அமைச்சராக இருந்த போது அவர் மிகவும் மரியாதைக்குரியவராக இருந்தார்.  ஆனால் இப்போது மன்மோகன்சிங் பிரதமராக பதவியேற்ற பின் நாளுக்கு நாள் ஒவ்வொரு ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. 1947 முதல் இன்று வரை நடைபெற்றுள்ள ஆட்சிகளை ஒப்பிட்டு பார்த்தால் ஊழல் மிகுந்த ஊழல் நிறைந்த ஆட்சி மன்மோகன்சிங் ஆட்சிதான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது நடைபெற்று வரும் மத்திய அரசில் பங்கு பெற்ற பல அமைச்சர்கள் ஊழல் காரணமாக பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிலும் பலர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் கண்டிக்க தக்கவிஷயம்ய காங்கிரஸ் கூட்டணி
கட்சியான திமுகவினர்கள் மட்டும் இந்த ஊழலில் சம்பந்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலருக்கு இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. ஆனால் அவர்களில் யாரும் விசாரிக்க படவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் ஊழலில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் காரர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தின் துவக்கத்தில் ஒரு கீதம் ஒளிபரப்பப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கவும் மாட்டேன், லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் என்று நான் பேசியுள்ளேன். அரசாங்கம் ஊழல் நிறைந்ததாக இருந்தாலும் மக்கள் லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன் லஞ்சத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று மக்கள் அனைவரும் சபதம் மேற்கொள்ள வேண்டும். இந்த யாத்திரையின் குறிக்கோள் ஊழல் மூலம் சுவிஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி பணமும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். 25 லட்சம் கோடி  ரூபாய் இந்த நாட்டிற்கு  கொண்டு வரப்பட்டால் நமது நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க முடியும். அப்போது தான் நாம் பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்வதில் பெருமை படமுடியும் தென்காசி மக்களுக்கு மிக்க நன்றி இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் தென்காசியிலிருந்து அந்த ரதயாத்திரை  குற்றாலம், செங்கோட்டை, வழியாக திருவனந்தபுரம்
சென்று அங்கு இரவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த ரத யாத்திரையில் எல்.கே.அத்வானியுடன் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன் ராஜூலு, எச்.ராஜா, சரவணபெருமாள், உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். மேலும் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள். மேலும் தென்காசிக்கு எல்.கே.அத்வானி வருகையை முன்னிட்டு தென்காசி நகரில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோட்ட
பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சுடலையாண்டி, பாலகுருநாதன், குமரேசசீனிவாசன், தென்காசி நகரத்தலைவர் விவேக்பாண்டியன், பாண்டித்துரை,  மணி, ராமன், சண்முகசுந்தரம், கார்த்திக், பாலசுப்பிரமணியன், குத்தாலிங்கம், திருநாவுக்கரசு, பாலசுப்பிரமணியன், நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் பா.செல்வி, நகர்மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, சங்கசுப்பிரமணியன்,  
 மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்