பாராளுமன்றத்தில் சிதம்பரத்திற்கு பா. ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

Image Unavailable

 

புதுடெல்லி. நவ. - 23 - பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து அவரை பேச விடாமல்  தடுக்க முயன்றனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று கூடியது. பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஒரு கேள்விக்கு பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எழுந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை  சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் உறுப்பினர்  ரகுவன்ஷா பிரசாத் சிங் கேட்ட கேள்விக்கு  சிதம்பரம் பதில் அளிக்க முற்பட்ட போதுதான் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து தங்களது ஆட்சேபணையை தெரிவித்தனர். லோக் சபையின் முதல் வரிசையில் விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அருகில் சிதம்பரம் அமர்ந்திருந்தார். சிதம்பரம் பதில் அளிக்க கூடாது என்று கூறி பா.ஜ.க.எம்.பி.க்கள் கோஷம் போட்டதால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.  எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் மீரா குமார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் சபையை  சபாநாயகர் மீரா குமார் ஒத்தி வைத்தார். பா.ஜ.க. உறுப்பினர்கள் ஒரு புறம் கோஷம் எழுப்ப மற்றகட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி  கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.  இதனால் சபையை நடத்த முடியாத நிலையில் சபாநாயகர்  சபையை ஒத்தி வைத்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால்  பாராளுமன்றத்தில் ப.சிதம்பரத்தை புறக்கணிக்கபோவதாக கடந்த திங்கள் கிழமை  பா.ஜ.க. தலைவர்கள் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ