முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கசாப்பை தூக்கிலிடுவது எப்போது?

சனிக்கிழமை, 26 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை, நவ. - 26 - மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப்பை இந்த அரசாங்கம் தூக்கிலிடுவது எப்போது? என்று அந்த தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். அவனை தூக்கிலிடுவதற்கு இந்த அரசு ஏன் காத்திருக்கிறது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.  மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதியன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள தாஜ் ஓட்டல், ஓபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல இடங்களில் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் அப்போது கிட்டத்தட்ட 168 க்கும் மேலானோர் பலியானார்கள். இவர்களில் அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் அடங்குவர்.  முன்னதாக இந்த தாக்குதல் பற்றி கேள்விபட்டதும் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் ராணுவத்தினரும், கமாண்டோ படையினரும் தீவிரவாதிகளுடன் பயங்கர சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இவன் பாகிஸ்தானை சேர்ந்தவன். ஆரம்பத்தில் இதை மறுத்த பாகிஸ்தான் பின்னாளில் அதை ஒப்புக் கொண்டது.  சமீபத்தில் கூட நிருபர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், அஜ்மல் கசாப்பை தூக்கில் போடுங்கள். அவன் ஒரு பயங்கரவாதிதான் என்று பகிரங்கமாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இன்றோடு 3 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. ஆனாலும் தாக்குதலில் ஈடுபட்டு தண்டனை பெற்ற அஜ்மல் கசாப் இன்னமும் தூக்கிலிடப்படவில்லை. இவனையும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தண்டனை பெற்ற அப்சல் குருவையும் தூக்கில் போடுமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இவர்களது மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.  

இந்நிலையில் அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது? அந்த நாள் எப்போது வரும்? என்று மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் இப்போது கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். கசாப்பை ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை. எதற்காக இந்த அரசாங்கம் காத்திருக்கிறது. இன்னொரு சம்பவம் நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறதா என்று இந்த தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் ஆத்திரத்தோடு கேட்கிறார்கள். இந்த தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவர், 13 வயது சிறுமி தேவிகா. சிறுமி தேவிகாவும், அவரது தந்தை நட்வர்லால் மற்றும் அவரது மகன் ஆகாஷ் ஆகியோர் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் ஒரு ரயிலுக்காக காத்திருந்த போதுதான் தீவிரவாதிகள் அந்த ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்களாம். இதில் சிறுமி தேவிகாவுக்கு வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று எப்படியோ உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஏராளமான நபர்கள் சாட்சியம் அளித்தனர். அவர்களில் இளம் வயது சாட்சியாக கருதப்படுபவர் இந்த தேவிகாதான். அவர் இது பற்றி கூறுகையில், நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இருந்தாலும் நடப்பதற்கு சிரமப்படுகிறேன். என்னுடைய படிப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் எங்கள் வீட்டை நான்கு முறை மாற்றி விட்டோம். காரணம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், நாங்கள் அடிக்கடி கோர்ட்டுக்கு போய் வருவதால் பயப்படுகிறார்கள். இதனால் நான்கு முறை வீட்டை மாற்றி விட்டோம். அஜ்மல் கசாப்பை தூக்கிலிடுவது எப்போது என்று இந்த சிறுமி கேள்வி எழுப்பினாள். மும்பையில் ஓபராய் ஓட்டலில் நடந்த தாக்குதலில் தனது கணவரை இழந்தவர்தான் கல்பனா. இவரும் இதே கேள்வியை வேதனையோடு கேட்கிறார். மூன்று வருடங்களாகி விட்டன. ஆனால் நீதி இன்னும் கிடைக்கவில்லை. கசாப் உயிரோடுதான் இருக்கிறார். நீதி இந்த விஷயத்தில் தாமதிக்கப்படுகிறது. ஏராளமான பணமும் செலவாகிறது என்று கல்பனா கண்ணீர்மல்க தெரிவித்தார். மும்பை தாக்குதல் சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு அரசாங்கம் தரும் பதில்தான் என்ன என்பதுதான் புரியவில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்