முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அரசு இசைக் கல்லூரியில் அமைச்சர் ஆய்வு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.1 - சென்னையில் உள்ள அரசு இசைக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் அறநிலையத்துறை அமைச்சர் மு.பரஞ்ஜோதி ஆய்வு செய்தார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து சமயம், அறநிலையங்கள் மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.பரஞ்ஜோதி  29.11.2011 அன்று கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகியவற்றிற்குச் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறையின் முதன்மைச் செயலாளர் வி.கு.ஜெயக்கொடியும், கலை பண்பாட்டுத்துறை ஆணையர் (பொ) சோ.சு.ஜவஹரும் உடன் இருந்தார்கள்.

அரசு இசைக்கல்லூரிக்கு வருகைபுரிந்த அமைச்சரை  கல்லூரி முதல்வர் அ.நடராஜனும்,   இசைக்கல்லூரிகளின் கலையியல் அறிவுரைஞர் வீணை காயத்திரியும், இசைப்பள்ளிகளின் கலையியல் அறிவுரைஞர் ஷோபா சேகரும் வரவேற்றனர். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியைப் பார்வையிட்ட அமைச்சர்  இசைக்கல்லூரியில் நடைபெற்று வரும் பல்வேறு பாடப்பிரிவுகளையும் பார்வையிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவ  மாணவியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார். 

இசைக்கல்லூரியில் மாணவியருக்கு மட்டும் விடுதி வசதி தற்பொழுது உள்ளது என்றும், மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சரின்  முன் வைத்து, விரைவில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர்  தெரிவித்தார். அதே போன்று இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.250/​ இல் இருந்து உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி அவர்களது அறிவுரைப்படி விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள். 

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தற்பொழுது 270 மாணவ- மாணவியர்கள் மட்டுமே பயின்று வருகின்ற சூழ்நிலையை மாற்றி, தேவையான அடிப்படை வசதிகள், விளம்பரங்கள், தகுதியான கல்வி ஆகியவற்றின் மூலம் அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும், இசைக்கல்லூரி வளாகத்தினைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைவில் பல்கலைக்கழகங்களுடன் அனைத்து இசைக்கல்லூரிகளுக்கும் இணைவு பெறவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

தற்பொழுது 17 மாவட்டங்களில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நல்ல பயிற்சி வழங்குவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பார்வையிட வந்த அமைச்சரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேனிசைத் தென்றல் தேவாவும், உறுப்பினர் செயலாளர் கலைமாமணி சச்சுவும் வரவேற்றார்கள். மன்றத்தின் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் வளாகத்தை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணியினை விரைவில் மேற்கொள்ளுமாறும், மன்றத்தின் செயல்பாடுகளை முதலமைச்சரின் அறிவுரையின்படி தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் நடத்தி கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்