முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் இயல்பான கூட்டாளி அ.தி.மு.க: அத்வானி

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. 25 - தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இல்லாவிட்டாலும் கூட பா.ஜ.க.வின் இயல்பான கூட்டாளியாக அ.தி.மு.க. விளங்குகிறது. அக்கட்சியுடன் நாடாளுமன்ற மட்டத்தில் நாளுக்கு நாள் உறவு வளர்ந்து வருகிறது என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறியுள்ளார்.  இதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைவதற்கான சாத்திய கூறுகளை அவர் கோடிட்டு காட்டியுள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்து அத்வானி எழுதியிருப்பதாவது, மாநில அரசுகள் மீதான தனது சர்வாதிகார போக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடைப்பிடித்து வருகிறது. எனவே வலுவான மத்திய, மாநில அரசுகள் உறவை விரும்பும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்கள் வலுவாக வேண்டும். மத்திய அரசு பலவீனமாக வேண்டும் என்பதல்ல அர்த்தம். மத்தியிலும் வலுவான அரசு இருக்க வேண்டும். அதே போல் மாநிலங்களிலும் வலுவான அரசு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மத்திய அரசாக அது இருக்க வேண்டும். மாநிலம் பலமாக இல்லாவிட்டால் மத்திய அரசும் பலமாக இருக்க முடியாது. இந்த பிரச்சினையை சமீபத்தில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா எடுத்துரைத்தார். பா.ஜ.க. வின் இயல்பான கூட்டாளியாக அ.தி.மு.க. விளங்குகிறது. தேசிய முற்போக்கு கூட்டணியில் அ.தி.முக. ஓர் அங்கமாக இல்லையென்றாலும் கூட நாடாளுமன்ற மட்டத்தில் பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் நான் ரத யாத்திரை மேற்கொண்ட போது பாதையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தமிழக போலீசார் தக்க சமயத்தில் கண்டுபிடித்தனர். இதற்காக நான் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி கூறினேன் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று மேலும் கூறினார் அத்வானி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்