முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிங்கா படத்துக்கு தடை இல்லை: மதுரை ஐகோர்ட்டு

புதன்கிழமை, 3 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் கதை திருட்டுப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை பி.பீ.குளம் பகுதியை சேர்ந்தவர் ராம ரத்தினம், இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
“முல்லைவனம் 999” என்ற பெயரில் நான் படம் இயக்கி வருகிறேன். அதன் கதையை “யூ டியுப்பில்” வெளியிட்டு இருந்தேன். இந்தக்கதையை திருடி, “லிங்கா” படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
எனது கதையை திருடியதற்காக “ராக்லைன்” வெங்கடேஷ், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். நீதிபதி வேணுகோபால் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில், “எனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனு, தாக்கல் செய்யப்பட்டள்ளது.
விளம்பர நோக்கத்தில் போடப்பட்டுள்ள இந்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், “லிங்கா படத்தின் கதை, தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கதையை, பொன்குமரன் எழுதி உள்ளார். லிங்கா பட கதை திருடப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், “முல்லைவனம் 999 படத்தின் கதையும், லிங்கா படத்தின் கதையும் ஒன்றுதானா? என்பதை கண்டறிய ஒரு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
லிங்கா படம் இன்னும் வெளியாகவில்லை. இதற்குள் மனுதாரர், அந்தக் கதை தனது கதை என்று கூறுவதை ஏற்கமுடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த நீதிமன்றத்தில் மனுதாரரின் கோரிக்கை மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால், மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகி, பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து