முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் மலைப்பாதையில் வெடிகுண்டு புதைத்து வைத்திருப்பதாக பீதி

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு நேற்று 4 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
போனை எடுத்து பேசியபோது, கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய போலீஸ் அதிகாரி ஒருவர், திருப்பதி மலைப்பாதையில் சாலை ஓரம் மண்ணுக்குள் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும், ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பெங்களூருக்கு பேசியதாகவும், அந்த தகவலை நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
மேற்கண்ட தகவலை கேள்விப்பட்ட ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள், உடனடியாக திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேற்கூறிய தகவலை தெரிவித்ததுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டனர்.
அதன்படி திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கோபிநாத்ஜாட்டி தலைமையில் ஏராளமான போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், துப்பறியும் நாயுடன் திருப்பதி மலைப்பாதைகளுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதேபோல், அலிபிரி டோல்கேட்டிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவில், அன்னதான கூடம், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நான்கு மாட வீதிகள், கல்யாண கட்டாக்கள், மத்திய வரவேற்பு மையம், அமைனிட்டி ஹால்கள், பாலாஜி பஸ் நிலையம், அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகள் மற்றும் திருப்பதி ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நடைபாதையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூர் போலீசாருடன் செல்போனில் தொடர்பு கொண்டு திருப்பதி மலைப்பாதைகளில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பதாக தகவல் கூறிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, 2 பேரின் செல்போன் நம்பர்கள் பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை விரைவில் பிடித்து விடுவதாக கர்நாடகா, ஆந்திரா போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மலைப்பாதைகளில் வெடிகுண்டுகள் புதைத்து வைத்திருப்பதாக எழுந்த தகவலால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து