முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை கண்காட்சி துவக்கம்

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்துள்ள பொருட்கள் விற்பனை கண்காட்சியை அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களின் விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடவும், அப்பொருட்களை சந்தைப்படுத்திடவும் கிராம அங்காடிகள், கல்லூரி சந்தைகள், மாவட்ட அளவிலான சாராஸ் கண்காட்சிகள், மாநில, தேசிய அளவிலான கண்காட்சிகள் என பல்வேறு கண்காட்சிகள் மூலமாக பிரபலப்படுத்தி மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், அரசின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் நோக்கிலும், விற்பனை வாய்ப்பினை மேம்படுத்திடும் வகையிலும், சென்னையில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் மாநில அளவிலான விற்பனை கண்காட்சிகள் மூலமாக பல்வேறு விற்பனை வாய்ப்புகளை மகளிர் குழுக்களுக்கு ஏற்படுத்தி தருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா கிறிஸ்துமஸ், – புத்தாண்டு, – பொங்கல்" விழாக்கால விற்பனைக் கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புகளின் விற்பனை மையத்தினை (கியாஸ்க்) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி நேற்று தொடங்கி வைத்தார்.

சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் பா.வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே. அமுதவல்லி, மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவற்றின் கூடுதல் இயக்குனர்கள் ஆகியோர் இத்தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விற்பனைக் கண்காட்சி 19–ந்தேதி முதல் ஜனவரி 11–ந்தேதி வரை, காலை 10.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும். அனைத்து பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இக்கண்காட்சியில் விற்பனை நடைபெறும்.

இக்கண்காட்சியில் 32 மாவட்டங்களில் செயல்படும் மகளிர் திட்டம், புது வாழ்வுத் திட்டம், சுனாமிக்குப் பிந்தைய வாழ்வாதாரத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 110 குழுவினர் 55 விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். அமைச்சர்கள், சுய உதவிக் குழுவினர் அமைத்திருந்த அரங்குகளை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் குறித்து விவரங்கள் கேட்டறிந்து, ஜெயலலிதா பெண்களுக்காக மேற்கொண்டுவரும் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் தெரிவித்தனர்.

மகளிர் மேளா கிறிஸ்துமஸ், – புத்தாண்டு ,- பொங்கல்" விற்பனை கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பிரத்யேக தயாரிப்புகள் விற்பனைச் செய்யப்படுகிறது. குறிப்பாக, உணவு பொருட்கள், மரச்சிற்பங்கள், ஆபரண வகைகள், சணல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், புடவை வகைகள், கைத்தறி துணி வகைகள், கைவினைப் பொருட்கள், மென் பொம்மைகள், தேங்காய் நார் பொருட்கள், மலைப்பிரதேச பொருட்கள், இயற்கை தானிய வகைகள், மணி மாலைகள், கிளிஞ்சல்கள், உலோகப் பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள், மெழுகுவர்த்திகள், பத்தமடை பாய் வகைகள் மற்றும் தோல் பொருட்கள் தரமாக தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. இக்கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சினேகலதா செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து