முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசு

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பன்றிக்காய்ச்சல் குறித்து முன்னெரிச்சை நடவடிக்கைகள் மற்றும் முழுமையான சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இது குறித்து வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்களின் முதல்வர்  ஜெயலலிதாவின்  வழிகாட்டுதலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்  தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், டாக்டர். ப. செந்தில்குமார்,  எம்.எஸ். சண்முகம்பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  பன்றிக் காய்ச்சல் ஒருவகையான ஃபுளூ காய்ச்சல் ஆகும். உலக சுகாதார நிறுவனம் இந்த காய்ச்சல் 2009-ஆம் ஆண்டு உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து இது உலக அளவில் கொடிய நோய் என்றுஉலக சுகாதார நிறுவனம் ஆரம்ப நிலையில் அறிவித்தது. அதன்பிறகு 2010-ஆம் ஆண்டு பன்றிகாய்ச்சல் வைரஸ் கிரிமியின் வீரியம் குறைந்த காரணத்தினால் இந்தக் காய்ச்சலை கொடிய நோய் என்ற நிலையில் இருந்து மாற்றி அடுத்த கட்டத்தில் அந்தந்த பருவ காலங்களில் காணப்படும் குணப்படுத்தக்கூடிய சாதாரண ஃபுளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அதன் தரத்தை தற்போது வகைப்படுத்தியுள்ளது.இந்தக் காய்ச்சலின் தாக்கம் தற்போது டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களிலும், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு இந்நோயை தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

பன்றிக் காய்ச்சலுக்கு ஒசில்டாமிவீர் (டாமி புளூ) என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம். தமிழக அரசு மருத்துவ நிலையங்களில் தேவையான அளவு டாமி புளூ மாத்திரைகள் (1.5 இலட்சம்) தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக,கிங் மருத்துவநிலையம் உட்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 13 தனியார்
ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென,தனியாக சிறப்பு வார்டுகள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குனரகத்தில் பன்றிக் காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் (தொலைபேசி எண்.044 – 24350496, 044- 24334811, 94443 40496 மற்றும் 93614 82899) ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104
சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு
போட்டு கைககளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவ வேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒரு முறை கைகளை கழுவ
வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.   தமிழகத்தில் இந்தக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிசிக்சை அளிக்கவும் ஏற்பாடுகளும்மக்களின் முதல்வர் ஜெயலலிதா  வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டுள்ளன. எனவே இக்காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து