முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2024      இந்தியா
Electronic-Machine 2023-10-

Source: provided

புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது. 

பாராளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

நேற்று (ஏப். 26) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

கேரளாவில் 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு வயநாடு, பாலக்காடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  அதேபோல், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நேற்று 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, மத்திய பெங்களூரு, சிக்கபள்ளாபூர், கோலார், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூரு ரூரல், ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி-சிக்கபள்ளாபூர் ஆகிய 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் 5 பாராளுமன்ற தொகுதிகளே உள்ளன. இந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த 5 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், நேற்று ஜம்மு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோல் அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.  பெரும்பாலும் நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து