முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றது

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 30ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் போட்டியிடாததால் 4 முனைப்போட்டி தற்போது உறுதியாகி உள்ளது. அதே நேரம் பிரச்சாரமும் தொகுதியில் சூடுபிடித்துள்ளது.
 
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் மற்றும் திருச்சியை அடுத்த சோழன்நகரில் உள்ள ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் வேட்புமனுதாக்கல் நடைபெற்று வந்தது. அதிமுக  வேட்பாளர் வளர்மதி, திமுக வேட்பாளர் ஆனந்த், பாரதிய ஜனதா வேட்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்ரமணியன், ஜனதா பரிவார் கூட்டணி வேட்பாளர் ஹேமநாதன், டிராபிக் ராமசாமி, உள்பட 18 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ், ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க, வைகோ தலைமையிலான மதிமுக, விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக ஆகிய முக்கிய கட்சிகள் எல்லாம் போட்டியிடாமல் பின்வாங்கி விட்டன. தோல்வி பயத்தால் இந்த கட்சிகள் எல்லாம் இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் இத்தேர்தலில் 4 முனைப்போட்டி நேற்று உறுதியாகி விட்டது.
 
கடந்த 26ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். அதேபோல நேற்று முன்தினம் குடியரசு தினம் என்பதால் வேட்புமனுதாக்கல் செய்யும் பணி நடைபெறவில்லை. நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய  கடைசி நாளாகும். நேற்றுடன் மனு தாக்கல் ஒரு முடிவுக்கு வந்தது. இன்று 28ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். அதை தொடர்ந்து 30ம் தேதி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 30ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்படும். அன்றே வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்படும். வரும் 11ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. அதைதொடர்ந்து வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர் 16ம்தேதி திருச்சியை அடுத்த பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனிடையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை டெல்லியிலிருந்து வரழைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 79 வாக்குச்சாவடிகள் பதட்டத்திற்குரியவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
 
ஸ்ரீரங்கம் தொகுதியில் இதுவரை 14 பொது சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இதில் அதிக பட்சமாக அதிமுக 7 முறை வென்று உள்ளது. திமுக, காங்கிரஸ் தலா மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த 2011 சட்டசபை பொதுத்தேர்தலில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா இங்கு போட்டியிட்டு சுமார் 42 ஆயிரம் ஓட்டுவித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 1400 ஓட்டு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. 138 இடங்களில் 322 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வளர்மதி, வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்துவருகிறார். இத்தொகுதிக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா செய்த நன்மைகளை எடுத்து சொல்லி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.

குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதியை சொர்க்க பூமியாக்க பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஜெயலலிதா அமலுக்கு கொண்டு வந்தது, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி அமைத்தது, யாத்ரீக நிவாஸ் தொடங்கி பக்தர்கள் தங்க வசதி செய்து கொடுத்தது, ஸ்ரீரங்கம் கோயிலில் நாள்தோறும் நடைபெற்று வரும் அன்னதானம் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பிரகாரத்தை சுற்றி பார்க்க வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக பேட்டரி கார்களை அறிமுகப்படுத்தியது போன்ற மக்களின் முதல்வரின் சாதனைகளை வளர்மதி எடுத்து கூறி வருகிறார்.

அதிமுக முன்னணி அமைச்சர்களும், மக்களின் முதல்வரின் சாதனைகளை வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதே போல் கருணாநிதியின் ஊழல்களை விளக்கும் துண்டுபிரசுரங்களையும் அதிமுகவினர் வழங்கி வருகிறார்கள். அதிமுக அமைச்சர்கள் அனைவருமே பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். இதே போல் திமுக, பாஜக, வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்து வருவதால் குளிர்காலத்திலும் அங்கு அனல் பறக்கிறது.

ஸ்ரீரங்கம்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள் ஓட்டுவேட்டை

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து ஸ்ரீரங்கம் நகரில் வீதிவீதியாக நேற்று அமைச்சர்கள் தீவிர ஓட்டுவேட்டையாடினார்கள். ஸ்ரீரங்கம் 2வது வார்டுக்கு உட்பட்ட அரங்கநாதர் திருக்கோயில் முன்புறம் உள்ள ரெங்கா, ரெங்கா கோபுரத்திலிருந்து திறந்த ஜீப்பில் வேட்பாளர் வளர்மதி கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஓட்டுகேட்டார்.

வேட்பாளர் வளர்மதியுடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, டி.பி.பூனாட்சி, அரசு கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. சேலம் மாவட்ட எம்.எல்.ஏக்கள் வீரபாண்டி, மாதேஸ்வரன்., தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் ஸ்ரீரங்கம், சேலம் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், திரளாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.

அதேபோல நேற்று மாலை ஸ்ரீரங்கம் நகரில் உள்ள 5வதுவார்டில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் ரமணா முன்னிலையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கலந்துகொண்டனர்.

அதன்பின்பு அமைச்சர் ரமணா ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டார். அப்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து