முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்றத்தில் இன்று 2015-16ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பாக நல்ல செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சில வரி விதிப்புகளும் இருக்கலாம்.

பாராளுமன்றம் கடந்த 23ம் தேதி கூடியது. இது பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் மே மாதம் வரை நீடிக்கும். முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். மறுநாள் நிலம் கையகப்படுத்தும் மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தாக்கலானது. இருப்பினும் சில திருத்தங்களை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 26ம் தேதி பாராளுமன்ற லோக்சபையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் கட்டண குறைப்பு பற்றியோ, கட்டண உயர்வு பற்றியோ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. புதிய ரயில்கள் விடுவது பற்றியும் அறிவிக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டை அதிமுக பொதுச் செயலாளர், மக்களின் முதல்வர் ஜெயலலிதா வரவேற்றுள்ளார். இருப்பினும் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி சபையில் தாக்கல் செய்கிறார். அப்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு தொடர்பாக அவர் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பொது பட்ஜெட் என்றாலே அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், இறக்கம், வருமான வரி வரம்பு போன்றவை முக்கியத்துவம் பெறும். விலைவாசி கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளனவா என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.50  லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மானியத்தை 20 சதவீதம் குறைப்பது, ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் பெறுபவர்களுக்கு காஸ் மானியம் ரத்து செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

சமையல் கேஸ் மானியம் தற்போது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதே போல் உரம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களும் வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ. 100 சதவீதத்தை தாண்டி விட்டது. இதில் பாதியை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. எனவே இது குறித்த அறிவிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. மேக்இன் இந்தியா, தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. ராணுவம், உயர் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நவீன மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.

பாரதீய ஜனதா அரசை பொருத்தவரை திட்டங்கள் அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் ஏற்கனவே கிடப்பில் உள்ள திட்டங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறது. எனவே அதற்கேற்றார்போல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து