முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனை காட்டிக் கொடுத்தவரின் வக்கீல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

புதன்கிழமை, 18 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

பெஷாவர் - பாகிஸ்தானில் பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்த டாக்டருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொலையை தலிபான்களின் ஆதரவு  இயக்கமான ஜூன்டாலா செய்ததாக பின்னர் அறிக்கை வெளியிட்டது.

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் கடந்த 2011ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது டாக்டர் ஷகில் அப்ரிடி என்பவர் அப்பகுதியில் போலி தடுப்பு ஊசி மருத்துவ முகாம்களை மேற்கொண்டு பின்லேடன் தங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் இது குறித்து அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பின்லேடன் தங்கியிருந்த பகுதியை அமெரிக்க அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து பின்லேடனை சுட்டுக் கொன்றனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் போலீசார் போலி மருத்துவ முகாம் நடத்தியதாக டாக்டர் ஷகில் அப்ரிடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

டாக்டருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தான் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் வழங்கும் உதவித் தொகையை அமெரிக்கா நிறுத்தி விட்டது. டாக்டர் ஷகில் அப்ரிடி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. டாக்டருக்கு ஆதரவாக பாகிஸ்தான் வழக்கறிஞர் சமியுல்லா அப்ரிடி ஆஜரானார். இதை தொடர்ந்து ஷமியுல்லாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வர தொடங்கின.

இதை தொடர்ந்து வழக்கறிஞர் ஷமியுல்லா துபாய்க்கு சென்று விட்டு சமீபத்தில்தான் பெஷாவர் நகருக்கு திரும்பினார். ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் மாலை வழக்கறிஞர் ஷமியுல்லா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இத்தாக்குதலில் ஷமியுல்லா சம்பவ இடத்திலேயே பலியானார் என்று பெஷாவர் நகர போலீசார் தெரிவித்தனர்.

பின்லேடனை அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்தவருக்கு ஆதரவாக வாதாட கூடாது என்று வழக்கறிஞரை எச்சரித்தோம். ஆனால் அவர் கேட்காததால் அவரை சுட்டு கொன்றோம் என்று தலிபான் ஆதரவு இயக்கமான ஜூன்டாலா நேற்று முன்தினம் இரவு இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து