முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில்  தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 அதிகரித்து, பவுன் ரூ.20,200–க்கு தங்கம் விற்பனையானது.

அட்சய திருதியை நாள் அன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்தவகையில் வருடந்தோறும் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அட்சய திருதியை நாளில் அனைத்து நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

நகைக்கடைகள் சார்பிலும் அன்றைய தினம் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு அட்சய திருதியை 21–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது. இதையடுத்து அந்த நாளில் தங்கம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் கிராம் ரூ.2,508–க்கும், பவுன் ரூ.20,064–க்கும் விற்பனையானது. இந்தநிலையில் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்தது. அதாவது முந்தைய நாள் விலையை காட்டிலும், கிராமுக்கு ரூ.17–ம், பவுனுக்கு ரூ.136–ம் விலை அதிகரித்து, ஒரு கிராம் ரூ2,525–க்கும், பவுன் ரூ.20,200–க்கும் தங்கம் விற்பனையானது.

வெள்ளியின் விலையும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.38.90–க்கும், கிலோ ரூ.36,385–க்கும் வெள்ளி விற்பனையானது. இந்தநிலையில் நேற்று வெள்ளியின் விலை அதிகரித்தது. அதாவது முந்தைய நாள் விலையை காட்டிலும் கிராமுக்கு 80 பைசா உயர்ந்து, ரூ.39.70–க்கும், கிலோவுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.37,105–க்கும் வெள்ளி விற்பனையானது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து வெள்ளியின் அதிகமான விலையேற்றம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் மீதான இந்த விலையேற்றம் வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்த்ததே. சர்வதேச அளவில் தங்கத்தின் மதிப்பு வெகுவாக உயர்ந்து வருகிறது. உலக சந்தையில் 2 நாட்களுக்கு முன்பு 1 அவுன்சு 1,195 டாலர் என விற்பனையான தங்கம், நேற்றுமுன்தினம்  1,208 டாலராக உயர்ந்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கப்பட்டதால் தங்கத்தின் விலை 13 டாலர்கள் அதிகரித்து உள்ளது. உலக சந்தையில் தங்க உற்பத்தி குறைந்துள்ளதாலும், தங்கத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியபடியே இருக்கிறது.அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து