முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பான விதிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆழ்துளை கிணறுகள், கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, பராமரிப்பது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐசிஎஃப் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.சிவகாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: திருவண்ணாமைல மாவட்டத்தில் திறந்து கிடந்த ஆழ் துளை கிணற்றில் தேவி என்ற நான்கு வயது குழந்தை தவறி விழுந்து இறந்தது தொடர்பாக கடந்த ஆண்டு ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

அதில், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஒழுங்குபடுத்தக் கோரினேன். இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (வரன்முறை) திருத்த சட்டம் 2014-ஆம் ஆண்டு ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய விதிமுறைகள் ஒரு மாதத்தில் பொது அறிவிப்பு, விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.

இதை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளதால், மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை எனக் கூறி முடித்து வைதத்து.

ஆனால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. என் அறிவுக்கு எட்டிய அளவில் ஆழ்துளைக் கிணறு அமைப்பது, பராமரிப்பது தொடர்பான விதிகளை தமிழக அரசு உருவாக்கவில்லை அல்லது வெளியிடவில்லை.

கடந்த 13-ஆம் தேதி செய்தித்தாள் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதில், வேலூர் மாவட்டத்தில் தமிழரசன் என்ற இரண்டரை வயது சிறுவன் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது போன்று பல நிகழ்வுகள் இதற்கு முன்பு நடைபெற்றுள்ளன.

எனவே, வேலூரில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தமிழரசனின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கவும், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கும், பராமபரிப்பதற்கும் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994, சென்னை பெருநகர் பகுதி நிலத்தடி நீர் (வரன்முறை) திருத்த சட்டம் 2014-ஆம் ஆண்டு ஆகியவற்றில் கடுமையான விதிமுறைகளை கொண்டு வரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும், தமிழரசனின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணம் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஜூன் மாதம் 18- ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து