முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளம் பூகம்பத்தில் 60 பக்தர்களுடன் உயிர் தப்பிய ஸ்ரீரங்கம் ஜீயர்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ஜீயராக இருப்பவர் ஸ்ரீரெங்க நாராயணன். இவர் கடந்த 19ம் தேதி காத்மண்டு புறப்பட்டார். 60 பக்தர்களுடன் 20ம் தேதி டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் நேபாளம் நாட்டுக்கு சென்றார். 24ம் தேதி காலை போக்ரா விமானம் மூலம் டெல்லி வழியாக சென்னை வர திட்டமிட்டிருந்தார்.

காத்மண்டு விமான நிலையத்தில் காத்திருந்த போது 80 கி.மீ தொலைவில் போக்ரா என்ற இடத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் சென்றிருந்த 60 பக்தர்களும் பத்திரமாக உள்ளதாகவும் அவர்கள் நேற்று ஸ்ரீரங்கம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி சிந்தாமணியை சேர்ந்தவர் குலசேகரன். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர் நேபாளத்தில் முக்திநாத், பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு யாத்திரையாக செல்வதற்காக கடந்த 20ம் தேதி 17 பேருடன் புறப்பட்டார். அவருடன் 4 சமையல் கலைஞர்கள், 10 பெண்களும் இடம்பெற்றிருந்தனர். யாத்திரை சென்றவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உறவினர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

நேற்று முன்தினம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவர்களை இங்குள்ள  உறவினர்கள் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை காத்மண்டுவில் இருந்து பாதயாத்திரை சென்ற குழுவினர் திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்த உறவினர்களை தொடர்பு கொண்டு தாங்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த குழுவில் சென்னையை சேர்ந்த கணேசமூர்த்தி, லலிதா, கும்பகோணத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், இந்திராதேவி, லால்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், கண்ணகி, தஞ்சாவூரை சேர்ந்த மைதிலி, முசிறியை சேர்ந்த குழந்தைவேலு, புதுச்சேரியை சேர்ந்த வரதராஜா, சென்னையை சேர்ந்த நாராயணன், வைதேகி, லால்குடியை சேர்ந்த ஜெகதீசன், மகாதானபுரத்தை சேர்ந்த கங்கா, காஜாம்மாள், திருச்சியை சேர்ந்த கோவிந்தராஜன், சிங்காரவேலு, சோலை ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து