முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் மோகன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப், 29:: மக்களின் முதல்வர் ஜெயலலிதா  தொலைநோக்கு திட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  அளிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 150 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர்  ப.மோகன் கூறினார்.

கடந்த 3  ஆண்டுகளில் ரூ.141 கோடி செலவில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு 32 விதமான  திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.  800 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும்  மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணி அமர்த்தல் ஆணைகளையும்  அமைச்சர்   ப.மோகன் வழங்கினார்.

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின்  வழிகாட்டுதலின்படி, சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மத்திய பயிற்சி நிறுவன கூட்டரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தோல் துறை திறன் ஆலோசனை குழுவும் இணைந்து தோல் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தமான திறன் பயிற்சி பெற்றவர்களுக்கு  ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  ப.மோகன்   ‘‘திறன் சான்றிதழ் மற்றும் பணியமர்த்தல் ஆணை” வழங்கி  பேசினார். அவர் பேசியதாவது:–

‘‘கை தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கில்லை ஓத்துக்கொள்” என்றார் நாமக்கல் கவிஞர்.  இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக அரசு, தமிழகத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பிற்கான திறன் பயிற்சிகளை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினை தோற்றுவித்தது.  இக்கழகம் தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களின் மனிதவளத் தேவையினை கண்டறிந்து, அதனை பூர்த்தி செய்திடும் வகையில் திறன் பயிற்சி திட்டங்களை உருவாக்கி எல்லாத் துறைகளிலும் வழங்கி வருகிறது.

இதனால் தமிழகம் தொழில் திறன் மிக்க கேந்திரமாக மாறி வருகிறது.  இதற்காக, இக்கழகத்தை நன்முறையில் நிர்வகிக்க வசதியாக அரசு, அனைத்து திறன் எய்தும் பயிற்சிகளுக்கும் ஒருங்கிணைப்பு முகமை” ஆக செயல்படவும் ஆணையிட்டுள்ளது.  தோல்துறை மட்டுமல்லாது, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள ஆட்டோமொபைல், கனரக, இலகுரக வாகன ஓட்டுநர், கட்டுமானம், ஜவுளி, இலகு பொறியியல், வங்கி நிதிச் சேவை மற்றும் காப்பீடு, தொலைத் தொடர்பு, சுகாதாரம் போன்ற துறைகள் மற்றும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் புகழ் பெற்ற தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி வழங்குவதோடு நின்று விடாமல், குறைந்த பட்சம் பயிற்சி பெற்றோரில் 70 விழுக்காடு  சம்பந்தபட்ட துறை சார்ந்த தனியார் தொழிற் நிறுவனங்களில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான ஊதியத்துடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி பெறுவோருக்கு போக்குவரத்து செலவீனமாக நாளொன்றுக்கு ரூ.75 – வழங்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் வழிகாட்டுத லின்படி, தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகம் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.140.81 கோடி செலவில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 591 நபர்களுக்கு 32 விதமான திறன் பயிற்சிகள் வழங்கியுள்ளது மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  மேலும்,  ஜெயலலிதாவின், தொலைநோக்குத் திட்டம் 2023ல் குறிப்பிட்டுள்ளவாறு வேலை வாய்ப்புகளைத் தரக்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை 2  லட்சம் இளைஞர்களுக்கு அளித்திட 2015–16 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழக காவல் துறையுடன் இணைந்து 25 ஆயிரம் நபர்களுக்கு ரூ.7 கோடியே 50  லட்சம் செலவில் தனியார் துறைக்கான பாதுகாப்பு சேவை பயிற்சி அளித்து வருகிறது.  இப்பயிற்சியின் மூலம் இதுவரை 4,500 நபர்கள் பயிற்சி முடித்து பயனடைந்துள்ளனர்.  இது இந்தியாவின் பிற மாநிலங்கள் வியந்து பாராட்டும் ஓரு முன்னோடித் திட்டம் ஆகும்.

பெண்களுக்கு மட்டுமே உகந்த ஆயத்த ஆடை பயிற்சி அவினாசிலிங்கம் JSS நிறுவனங்களின் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.  திறன் பயிற்சி வழங்குவது மட்டுமின்றி தொழிலாளர்களின் தரத்தினை மேம்படுத்த உதவும் வகையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் திறனை மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்குவதையும் திறன் மேம்பாட்டுக் கழகம் செயற்படுத்தி வருகிறது.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ‘தொலைநோக்குத் திட்டம் 2023ல் அடுத்த 11 ஆண்டுகளில் திறன் பயிற்சியினை 2 கோடி நபர்களுக்கு வழங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறன் பயிற்சியின் தேவையினையும், உலக தரம் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கிட வேண்டியதின் அவசியத்தையும் நன்கு உணர்ந்த  தமிழக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி 15 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் புதியதாக தொடங்கப்பட்டு, பல்வேறு புதிய தொழிற் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தோல் பதனிடும் தொழில் பண்டைக்காலம் தொட்டு இந்தியாவில் நடைபெற்று வந்த போதிலும், இன்று இத்தொழில் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் ஒரு சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது.  நமது பாரத அரசும் இத்தொழிலுக்கு மிகுந்த சலுகைகள் கொடுத்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி வருகின்றது.  பெருமளவில் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் தொழில்களில், தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 1956–57ல் 7 விழுக்காடு என்றிருந்த நிலை மாறி தற்போது 80 விழுக்காடு இடத்தை எய்தியுள்ளது.  தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், ஆம்பூர், வாணியம்பாடி,  ராணிப்பேட்டை, பேரணாம்பட்டு, சென்னை, திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இது ஒரு மிக முக்கியத் தொழிலாக நடைபெற்று வருகிறது. 

ஆண்டுதோறும் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறையாமல் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உலகச் சந்தையில் 6 விழுக்காடு தேவையினை நிறைவு செய்யும் இடத்தை எய்தியுள்ளதுடன், சுமார் 25  லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து சமூக பொருளாதார வளர்ச்சியில் இத்தொழில் முக்கிய இடம் பெற்றுள்ளது.  அதுமட்டுமின்றி, இதில் 60 விழுக்காடு மகளீராவர் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின் தோல் தயாரிப்பில், பாதியளவு அதாவது 50 விழுக்காடு பங்களிப்பினை தமிழகம் மட்டுமே தருகிறது.  எனவே இத்துறையில் பெருகி வரும் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு இந்த அரசு 3,200 நபர்களுக்கு திறன் பயிற்சி தோல் துறை திறன் ஆலோசனைக் குழு மற்றும் காலணி பொருட்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக முறையே 2,600 மற்றும் 600 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தோல் துறை திறன் கவுன்சில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் கடந்த 2½ ஆண்டுகளில் தோல் மற்றும் காலணித் துறைக்கான 50 தேசிய தொழில்சார் தரக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளது.  அதற்கேற்ப, பணியிலுள்ள மற்றும் புதிய தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சிகள் அளித்து வருகிறது.  தோல் துறை திறன் கவுன்சில் ஏற்கெனவே தோல் துறையில் பணியிலுள்ள 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தோல் துறை திறன் கவுன்சில், முதல் முறையாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்கனவே குறிப்பிட்டது போல் 2600 வேலையில்லா இளைஞர்களுக்கு, அதிலும் குறிப்பாக அதிகளவில்  மகளிருக்கு மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் மூலம் திறன் பயிற்சி வழங்கி தோல் காலணி துறையில் வேலைவாய்ப்பினை வழங்கும் சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.  இன்றைய தினம் முதல் குழுவில் பயிற்சி முடித்த 800 பயிற்சியாளர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு சான்றிதழ் மற்றும் பணி ஆணை பெறவுள்ள அனைவரையும்   மனதாரப் பாராட்டுகிறேன்.

சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் இந்த அற்புதமான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், எதிர் காலத்தில் இன்னும் பல ஆயிரம் பேரைத் தோல் மற்றும் காலணி துறையில் பணியமர்த்தும் வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.  இப்பயிற்சியின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பயிற்சி முடித்தவர்களில், பெரும்பான்மையினர் பெண்களாவர்.  இதன் மூலம், ஒரு தனி நபர் மட்டுமின்றி, ஒரு குடும்பத்தையே வாழ்விக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  சுருக்கமாகச் சொன்னால், ஓருமாத கால பயிற்சியின் மூலம் ஏழை எளியவரின் ஏற்றத்திற்கு அரசின் நிதியுதவி பயன்பட்டுள்ளது.  இவ்வாய்ப்பை நீங்கள் பெற்று பலன் பெற்றதோடு நில்லாமல், தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தைப் பற்றியும், அக்கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகள் பற்றியும், பிறருக்கும் எடுத்துக்கூறி மற்றவர்களும் பயன்பெற உதவிட வேண்டும்.

இந்தியாவிலேயே வளம் கொழிக்கும் முதல் மாநிலமாக, தமிழ்நாட்டை மாற்றிட,  மக்களின் முதல்வரின் தொலைநோக்குத் திட்டம் 2023-ல் அனைத்து மக்களின் தனி நபர் வருவாயை ஆறு மடங்கு உயர்த்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எய்தவும்,   அம்மாவின் நல்வழிகாட்டுதலுடன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக பயிற்சி பெற்று, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று மாநிலத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக அயராது பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.

அப்போது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர்  சி. சமயமூர்த்தி வரவேற்றார்.   தோல் துறை திறன் கவுன்சில் தலைமைச் செயலாக்க அதிகாரி   ரமேஷ் குமார் நன்றி கூறினார்.   தோல் ஏற்றுமதி கவுன்சில் தலைவர்  எம்.ரஃபீக் அகமது, தோல் துறை திறன் கவுன்சில் தலைவர்   ஹபீப் ஹூசைன், தோல் ஏற்றுமதி கவுன்சில் பிராந்திய தலைவர் (மேற்கு)  அக்கீல் அகமது மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து