முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தல்லாகுளத்தில் இன்று அழகருக்கு எதிர்சேவை: நாளை காலை ஆற்றில் இறங்குகிறார்

சனிக்கிழமை, 2 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மதுரையில் நடந்த மீனாட்சி திருவிழா மிகச்சிறப்பாக முடிவுற்ற நிலையில் அழகர் திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி மலையில் இருந்து அழகர் புறப்பட்டார். அவருக்கு இன்று தல்லாகுளத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை அழகர் ஆற்றில் இறங்குகிறார்.

மதுரை அருகே அழகர்கோவிலின் முக்கிய திருவிழாவான சித்திரைப் பெருந்திருவிழா இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடு நடந்தது. வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணிக்கு 18ம் படி கருப்பணசுவாமி கோயில் முன்பு, தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். வழியில் உள்ள கள்ளந்திரி, அப்பன்திருப்பதி மண்டபங்களில் எழுந்தருளினார். இன்று அதிகாலை 4 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை செய்து அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து இன்று(நாளை)  நள்ளிரவு 12 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில், தரிவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி எழுந்தருள்வார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை வைகை ஆற்றில் காலை 6.45 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வந்து இறங்குகிறார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பாய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

பின்னர் வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் இரவு எழுந்தருளி காட்சி தருகிறார். 5ம் தேதி காலை சேஷவாகனத்தில் புறப்பட்டு, பின்னர் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தருகிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். 6ம் தேதி அதிகாலை மோகன அவதாரத்தில் அழகர் காட்சி தருகிறார். அன்று பிற்பகல் ராஜ திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு அன்றிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும். மே 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்மலை நோக்கி புறப்படுகிறார். அன்றிரவு அப்பன்திருப்பதி மண்டபத்தில் காட்சி தருகிறார். 8ம் தேதி காலையில் கோயிலுக்குச் சென்று இருப்பிடம் சேருகிறார். 9ம் தேதி உற்சவ சாந்தி, மஞ்சள் நீர்சாற்றும் முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்தாண்டு சுமார் 410 மண்டபங்களில் அழகர் எழுந்தருள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோயில் நிர்வாக அதிகாரி வரதராஜன் மற்றும் பணியாளர்களும் செய்துள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாள் விழாவாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 11ம் நாள் விழாவாக நேற்று முன் தினம் நான்கு மாசிவீதிகளில் தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு 9 மணிக்கு கோயிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தம், தேவேந்திர பூஜை நடைபெறுகிறது. இதில் அம்மன், சுவாமி, பிரியாவிடை எழுந்தருள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீண்டும் திருப்பரங்குன்றம் செல்வதற்காக மீனாட்சி, சுந்தரேஸ்வரரிடம் விடை பெற்று தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர். இத்துடன் கோயில் சித்திரை திரு விழா நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து