முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு ஜவுளி தொழில் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தில் 4 அமைச்சர்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 22 ஜூலை 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, ஜவுளித் தொழிலில் முதலீடு செய்ய தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் எஸ். கோகுலஇந்திரா தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின்  சீரிய வழிகாட்டுதல்களின்படி,  நடைபெற உள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015–க்கான  ஜவுளி மற்றும்  ஆடைகள் தொழில் தொடர்பான ஒருங்கிணைப்பு தொடக்க கூட்டம் சென்னையில் நேற்று  ஐ.டி.சி  கிராண்ட் சோழா ஹோட்டலில் தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுலஇந்திரா, ஊரக தொழில் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ப.மோகன், காதி கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பூனாட்சி ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றவர்களை கைத்தறி மற்றும் துணிநூல்துறை இயக்குனர் வரவேற்றார்.

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும்  கதர்துறை      அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், மாநிலத்தில் ஜவுளித்  துறையில்  தற்போதைய நிலைபற்றி  சுருக்கமாக எடுத்துரைத்தார்.    அவர்  பேசும்போது  உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக 12  தொழில்  பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில்  ஜவுளி மற்றும் ஆடைகள்  தொழிலும்  அடங்கும்  எனஅவர் குறிப்பிட்டார். நாட்டில் பரந்து விரிந்துள்ள      நூற்பாலைத் தொழிலில்  60 விழுக்காடு அளவிற்கு நூற்பாலைகள் தமிழ்நாட்டில்  உள்ளன எனவும், 40 விழுக்காடு அளவிற்கு  பருத்தி நூல் உற்பத்தியை தமிழ்நாடு   வழங்குகிறது  என அவர்  சுட்டிக்காட்டினார். ஜவுளித் தொழிலுக்கு முழுமையான  இயக்க சூழலை தமிழ்நாடு   வழங்குகிறது.        இம்மாநிலத்தில்  கொட்டிக்கிடக்கும்  தாராளமான  வாய்ப்பு வளங்களின் காரணமாக  ஜவுளித் தொழிலில்  அனைத்து பிரிவுகளையும்  இணைத்து ஜவுளித் தொழிலை மேம்படுத்துவதில் நவீன தொழில் நுட்பங்களை  அறிமுகப்படுத்துவதில்  தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலுக்கான  அரசின் முன் முயற்சிகளை எடுத்துரைத்து  தமிழ்நாட்டில் ஜவுளித் தொழிலில்    முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வளங்களை வெளிப்படுத்துவது இந்த கூட்டத்தின்   நோக்கம்  ஆகும்.

தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசும்போது, இந்தியாவில் முதன்மையான மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் உலகளாவிய  உற்பத்தி  மையமாக இம்மாநிலம்  திகழ்வதாகவும் நாட்டின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 11 விழுக்காட்டினை தமிழ்நாடு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.மாநிலத்தில் முதலீட்டாளர்களுக்கு அனைத்து நிலைகளிலும் சாதகமான சூழ்நிலையையும் முதலீட்டிற்கு ஏற்ற கட்டமைப்பையும்  மாநில அரசு உருவாக்கியுள்ளது.    மேலும் தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, தமிழ்நாடு தானியங்கி ஊர்திகள் மற்றும் தானியங்கி ஊர்தி பாகங்கள் கொள்கை 2014 மற்றும்  தமிழ்நாடு உயிரி தொழில்நுட்ப கொள்கை 2014 ஆகியவற்றையும்  தமிழ்நாடு அரசு  அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

காதி மற்றும் கதர் கிராமத்துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி பேசும்போது  மாநிலத்தில் திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சி நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசும்போது, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில்  தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதாகவும், ஜவுளித் தொழிலை பாதுகாத்து மேம்படுத்த தள்ளுபடி மான்யத் திட்டம், வட்டி மான்யத் திட்டம் விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், சூரிய எரிசக்தி வசதியுடன்கூடிய பசுமை வீடுகள் அமைக்கும் திட்டம் என ஏராளமான முன்னோடி  நலத் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருவதாகவும், நூலிழை, துணி வகைகள் ஆடைகள், ஆயத்த ஆடைகள் என ஜவுளித் தொழில் அனைத்து பிரிவுகளிலும் முதலீட்டிற்கு வாய்ப்பு வளங்கள் தமிழ்நாட்டில் அபரிதமாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் அம்மா வழிகாட்டுதல்களின்படி புதிய முதலீடுகளை பெருக்கி தமிழ்நாட்டை தொழில்துறையில் முதன்மையான மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜவுளித் தொழிலுக்கென பிரத்தியேகமாக  ஜவுளி தொழில்  கொள்கை விரைவில் வகுக்கப்படும்   எனவும்  அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்தார்.

ஊரகத்தொழில் மற்றும் தொழிலாளர்நலத்துறை அமைச்சர் ப.மோகன் பேசும்போது  ஜவுளித்தொழிலானது  மாநிலத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், என தெரிவித்து அனைத்து தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் ஜவுளித் தொழில் தொடர்பான நிலவரங்கள் மற்றும்  வளங்களை கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும்  விரிவாக  எடுத்துரைத்தனர்.  இந்தக் கூட்டத்தில்  நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்  ஜவுளி மற்றும்  ஆடைகள்  தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து