முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

வெள்ளிக்கிழமை, 2 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

நாகப்பட்டினம், கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி இறுதியில் அவர்களை சிறை பிடித்துச் செல்வது காலங்காலமாக நடந்து வருகிறது. இத்தனை பிரச்சினைக்கும் காரணம் கட்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது தான். அதனால் தான் கட்சத் தீவை மீட்கக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கட்சத் தீவை மீட்டேத் தீருவேன் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

மேலும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை விடுவிக்க நடவடிக்கைக் எடுக்கக்கோரி பிரதமருக்கு அவ்வப்போது முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி வருகிறார். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

2 தினங்களுக்கு முன்பு கூட பாரத பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில் இலங்கை கடற்படை சிறைப்பிடித்த 28 மீனவர்கள் மற்றும் 30 மீன்பிடி படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் மேலும் 7 மீனவர்கள் தற்பொழுது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். நாகை நம்பியார் நகரை சேர்ந்த சத்யன் தலைமையில்  வாஞ்சிநாதன், முருகன், அண்ணாமலை, ராஜேஷ், மோகன காந்தி, சுப்பிரமணியன் ஆகிய 7 பேர் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது, இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனர். அவர்கள் நாகை மீனவர்கள் 7 பேரையும் எல்லை தான்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

கைதான மீனவர்கள் 7 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது.

நாகை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பியார் நகர் மீனவர்களிடையே தற்பொழுது பதற்றம் நிலவுகிறது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்