முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பஸ்களில் தீபாவளி முன்பதிவு தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 6 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, அரசு பஸ்களில் தீபாவளி முன்பதிவு துவங்கியது. பொதுமக்கள் ஆன் லைன் மூலம் டிக்கெட் பெறலாம்.

தீபாவளி பண்டிகை நவம்பர் 10–ம் தேதி (செவ்வாய் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரெயில்கள் மற்றும் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன. வெளியூர் செல்லக் கூடியவர்கள் கூடுதல் சிறப்பு ரெயில்களை எதிர் நோக்கியுள்ளனர். சிறப்பு ரெயில் குறித்த அறிவிப்பு வருமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் மேலும் சில தீபாவளி சிறப்பு ரெயில்களை விட வேண்டும் என்று சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தொடங்கியுள்ளது. அரசு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே www.tnstc.in என்ற இணையதளம் வழியாக டிக்கெட்டினை முன்பதிவு செய்யலாம்.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேரிலும் சென்று முன்பதிவு செய்து கூட நெரிசல் பயணத்தை தவிர்க்கலாம். கோயம்பேட்டில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 450 அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. நீண்ட தூரம் செல்லக்கூடிய இந்த பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

தீபாவளி சிறப்பு பஸ்கள் மற்றும் முன்பதிவு ஏற்பாடுகள் குறித்து விரைவு பஸ் போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறியதாவது:–

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரெயில்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டு இடம் நிரம்பிய பிறகு தான் அரசு பஸ் பக்கம் திரும்புவார்கள். அதனால் இன்னும் அரசு பஸ்களுக்கான முன்பதிவு விறுவிறுப்பு அடையவில்லை. இந்த மாதம் இறுதியில் தான் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். ஆனாலும் நாங்கள் முன்பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். சிறப்பு பஸ்கள் விடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கும் மற்ற நகரங்களில் இருந்து சென்னைக்கும் அரசு விரைவு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். தற்போது 1300 பஸ்கள் உள்ளன. இவை அனைத்தும் தீபாவளி பண்டிகை காலத்தில் இயக்கப்படும். மேலும் பிற போக்குவரத்து கழக பஸ்களும் அதிகளவு இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்