முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      தமிழகம்
Image Unavailable

நெல்லை - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீண்டும் நேற்று முதல் மின் உற்பத்தி தொடங்கியது. முதல் நாளான நேற்று 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய 2 அணு உலைகள் உள்ளன.

அதில் முதல் அணு உலையில் கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது. இதை தொடர்ந்து டிசம்பர் 31–ந்தேதி வணிக ரீதியான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்பு பராமரிப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு (2015) ஜூன் மாதம் 24–ம் தேதி முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதுவரை மொத்தம் 687.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம் ரூ.1565 கோடி வருவாய் ஈட்டியது. இந்த மின்சாரத்தில் 310 கோடி யூனிட் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் நடந்தன. 7 மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 21-ம் தேதி இதில் அணுக்கரு பிளவு நடந்தது. அன்று அதிகாலை தொடங்கி மாலைவரை இந்த பணிகள் நடந்தன. இதையடுத்து நேற்று காலை 7.12 மணிக்கு கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் அணுஉலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. உற்பத்தி தொடங்கிய சிறிது நேரத்தில் மின் உற்பத்தி 60 மெகாவாட்டை எட்டியது. தொடர்ந்து 8.10 மணியளவில் 300 மெகாவாட்டை எட்டியது.
இது குறித்து அணுமின்நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. 300 மெகாவாட் மின் உற்பத்தியானதும் நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று முதல் தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்