முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா - சுவாமி-அம்மன் தங்க சப்பரங்களில் பவனி

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை : சித்திரை திருவிழாவின் 3வது நாளான நேற்ற மதுரை மாசி வீதிகளில் சுவாமி-அம்மன்  தங்க சப்பரங்களில் பவனி வந்தனர். சுவாமி-அம்மன் வீதி உலாவின் போது, பள்ளிக்குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு ஆடிப்பாடி வருகிறார்கள்.  உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருக் கோவிலில் இருந்து சுவாமி பிரியா விடையுடன் பூத வாகனத்திலும் அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.

சுவாமி உலாவுக்கு முன்னதாக  திருக்கோவில்  யானை, காளை, ஒட்டகம், ஆகியவை 4 வீதிகளிலும் வலம் வந்தன. அவற்றுக்கு பின்னால், மின்னொளியில் திருவிழாவை பறைசாற்றும் வாகனங்கள் அணி வகுத்து வந்தன. வாகனங்களுக்கு பின்னால் பள்ளி குழந்தைகள் மீனாட்சியம்மன், பார்வதி, முருகன், ஆண்டாள், சிவன், மற்றும் காளி கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்தும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆடியும் வந்தனர். மேலும் கண்ணன் வேடமிட்ட குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடி உலா வந்தார்கள்.

ஆண்டு தோறும் பள்ளி குழந்தைகள் நேர்த்திக்கடனாக திருவிழாவில் இது போன்று வேடமிட்டு வலம் வருவது வாடிக்கையாகும். சுவாமி-அம்மன் தரிசனத்திற்காக மாசி வீதிகளின் இரு புறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் பள்ளி குழந்தைகளின் நடனத்தையும் பார்த்து பரவசம் அடைந்தார்கள்.

திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை சுவாமி-அம்மன் தங்க சப்பரங்களில்மாசி வீதிகளில் வலம் வந்தார்கள். பின்னர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்