முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று காலையில் வைகை ஆற்றில் இறங்கினார். அழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர். மதுரை வைகை அற்றில் கடல் அலை போல மக்கள் தலைகளையே காண முடிந்தது. மதுரை என்றாலே நினைவுக்கு வருவது, உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா தான். இத்திருவிழா மீனாட்சி கோவில் திருவிழா, அதை தொடர்ந்து அழகர் கோவில் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அந்த காலத்தில் இந்த இரண்டு விழாக்களும் வெவ்வேறு மாதங்களில் கொண்டாப்பட்டன. மீனாட்சி கோவில் திருவிழா மாசி மாதத்திலும், அழகர் கோவில் திருவிழா சித்திரை மாதத்திலும் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், இம்முறையை மாற்றியவர் மன்னர் திருமலை நாயக்கர். சைவ - வைணவ ஒற்றுமைக்காக இரண்டு விழாக்களையும் இணைத்து சித்திரையில் நடத்தினார் திருமலைநாயக்கர். அதன்படி, மீனாட்சி கோவில் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதன்பிறகு சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அதை தொடர்ந்து பட்டாபிஷேகம், திக்விஜயம் நடைபெற்றது. அதையடுத்து, கடந்த 19ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் மறுநாள் தேரோட்டமும் இனிதே நடைபெற்றன. இவ்வாறு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வந்த நிலையில், அழகர் மலையில் இருந்து சுந்தரராஜபெருமாள் அழகர் வேடம்பூண்டு மதுரைக்கு புறப்பட்டார். மூன்றுமாவடி, தல்லாகுளம் பகுதிகளில் அவருக்கு எதிர்சேவை விடிய விடிய நடைபெற்றது. பிறகு நேற்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும், ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை ஏற்றுக்கொள்வதற்காகவும் மதுரை புறப்பட்ட கள்ளழகருக்கு வழிநெடுக எதிர்சேவை முடிந்தபின் நேற்று அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.

இந்த கண்கொள்ளா காட்சியை காண ஆற்றிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் ஆவலோடு குவிந்திருந்தனர். "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷம் விண்ணை பிளந்தது.  முன்னதாக நேற்று முன்தினம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலையம் வந்த அழகர் அங்கு பெருமாளாக திருமஞ்சனமாகி தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிகொடுத்த மாலையை சாற்றி கொண்டு காட்சி கொடுத்தார். பின்னர் நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பண்ண சுவாமி கோவில் வந்த அவர் ஆயிரம்பொன் சப்பரத்தில் ஏறி தங்ககுதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி காலை 6.03 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். பல பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்பில் தீபம் ஏற்றி பக்தியுடன் வழிபட்டனர். அழகரை வரவேற்கும் வைகயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. அந்த தண்ணீர் ஆற்றில் கரைபுரண்டு ஓட குளு குளுவென அழகரை பக்தர்கள் தரிசித்தனர்.  ஆற்றுப்பகுதி முழுவதும் எங்கு திரும்மினாலும் மனித தலைகளையே காண முடிந்தது. கள்ளழகர் வேடம் பூண்டு பக்தர்கள் துருத்தி நீரை அழகர் மீதும், பக்தர்கள் மீதும் பீய்ச்சி அடித்து மகிழ்ந்தனர். பலர் வைகை கரையில் முடிக்காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து அழகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றன.

அப்போது, அங்கு வந்த வீரராகவ பெருமாள் அழகரை மூன்று முறை வலம் வந்தார். பின்னர், மக்கள் வெள்ளத்தில் நீந்தி சென்ற அழகர் பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்த தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் அழகர் வண்டியூர் புறப்பட்டு சென்றார். இன்று சேஷவாகனத்தில் அழகர் எழுந்தருளிகிறார்.  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை நகரம் மிண்ணொலியில் ஜொலித்தது. இன்று மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் அழகர் ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சிகளில் அருள்பாலிக்கிறார். முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் என தசாவதார காட்சிகளில் அழகர் அருள் பாலிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்