முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை நடிகர் சிம்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும் : டி.ராஜேந்தர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - நடிகர் சங்கத்திலிருந்து விலகும் முடிவை நடிகர் சிம்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- 

எனது மகன் டி.ஆர். சிலம்பரசன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து  விலக இருப்பதாக ஒரு தகவல் வெளியானதற்கு பின்னால், நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் ஒரு அறிக்கை  வெளியிட்டு இருந்தார்.  அதிலே நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி ஆகியோர் என்னை தொடர்பு கொண்ட போது, நானும் எனது மகனும் இந்த பீப் சாங்க் விஷயத்தை சட்டரீதியாக  எதிர்கொள்கிறோம் என்று சொன்னதாக சொல்லியிருந்தார். அது உண்மை தான். இந்த விஷயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஷால்  கருத்து சொன்னது  என்ன நியாயம்? செய்யாத தப்புக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே எங்கள் வாதம். இந்த வருத்தம் எனக்கும் இருந்தது என் மகனுக்கும் இருந்தது.  ஒரு சங்கம் என்று இருந்தால் ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய வேண்டும்.

இல்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும். விஷால் எதிர்காலத்திலாவது என் மகன் விஷயத்தில் நடந்து கொண்டதை போல, மற்ற உறுப்பினர்கள் ஒருவேளை யாராவது பாதிக்கப்படும் விஷயத்தில் நடந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.என் மகன் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து  விலகுகிறேன் என்று அறிவித்தவுடன், என் மகனையும்  தொடர்பு கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்லி, எங்கள் மீது அக்கறைக்காட்டிய  மூத்த நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.நடிகர் சங்கம், நமக்கு என்ன செய்தது என்பதை பற்றி நாம் கவலைப்படக்கூடாது.

இளம் பருவத்திலிருந்து காலம்  தொட்டு இந்நாள் வரை நடிகர் சங்கத்திற்காக சிம்பு, நீ ஆடி இருக்கிறாய், பாடி இருக்கிறாய், ஓடி ஓடி உழைத்திருக்கிறாய் இது வரலாறு. நம்முடைய முன்னோர்கள் மறைந்து விட்ட கலைவாணர் என்.எஸ்.கே., எம்ஜிஆர்,சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர்.ராதா போன்ற எண்ணற்ற தென்னிந்திய கலைஞர்கள் கட்டி காத்தது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். அதைவிட்டு விலக வேண்டாம். உன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே  உன் தந்தை என்ற முறையில் என் கருத்து. இதற்கு மேல் உனக்கென்று தனி கொள்கை இருக்கலாம், சுயமரியாதை உணர்வு இருக்கலாம் அதை நான் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்